‘நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை’ - பெண்ணின் தற்கொலையால் குளத்து நீரை வெளியேற்றும் மக்கள் | Karnataka villagers are pumping water from pond fears discovery of the body of a woman infected with HIV

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (06/12/2018)

கடைசி தொடர்பு:09:55 (06/12/2018)

‘நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை’ - பெண்ணின் தற்கொலையால் குளத்து நீரை வெளியேற்றும் மக்கள்

கர்நாடகாவில், ஒரு பெண் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதால், அந்தக் கிராம மக்கள் அதிகாரிகளின் உதவியுடன் குளத்தில் உள்ள மொத்த நீரையும் வெளியேற்றியுள்ளனர். 

பெண்

 பெங்களூருவில் இருந்து சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மொரப் (Morab) என்ற கிராமம். 13 ஹெக்டேர் பரப்பளவுகொண்ட இந்தக் கிராமத்தில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு முக்கிய நீராதாரமாக உள்ள ஒரே ஒரு குளம் அது மட்டுமே. இதைத்தான் அந்த கிராம மக்கள் தங்களின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திவந்தனர். 

குளம்

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அதே கிராமத்தைச் சேர்ந்த ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அந்தக் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலையால் மொத்த கிராம மக்களும் பயத்தில் உறைந்துள்ளனர். ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட அப்பெண்ணால், குளத்தில் நோய்த் தொற்று கலந்திருக்கலாம். எனவே, அந்த நீரை உபயோகப்படுத்தினால் தங்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளதாகக் கருதி, குளத்தில் உள்ள மொத்த நீரையும் வெளியேற்றி, புதிய நீர் திறந்து விட வேண்டும் என அந்த மாவட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குளம்

இதையடுத்து, மாவட்ட அதிகாரிகள் குளத்து நீரைச் சோதனை நடத்தி, நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளனர். இருந்தும் அதை ஏற்க மறுத்த கிராம மக்கள், அந்தக் குளத்தின் அருகில் செல்வதற்குத் தயக்கம் காட்டியுள்ளனர். இதனால், தற்போது அந்தக் குளத்தின் நீரை வெளியேற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுபற்றி பேசிய மாவட்ட நிர்வாக அதிகாரி நவீன் ஹுல்லூர், “ இந்தக் குளத்தினால் ஆபத்து இல்லை என கிராம மக்களுக்கு நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறினோம் . இருந்தும் அவர்கள் எங்கள் கருத்தை ஏற்கத் தயாராக இல்லை. அவர்களின் பயத்தைப் போக்கவே இந்தக் குளத்தில் உள்ள நீரை நாங்கள் வெளியேற்றி வருகிறோம். இதற்கு மாறாக, அருகில் இருக்கும் ஏரியில் இருந்து மாற்று நீர் கொண்டுவரும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று பேசியுள்ளார். 

குளம்

பொதுவாக, ஹெச்.ஐ.வி வைரஸ் என்பது காற்று, தண்ணீர், அதனால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் துணிகள், அவர் உண்ணும் உணவின் மீதி, அவர் பயன்படுத்தும் கழிவறை போன்றவற்றால் பரவக்கூடியது இல்லை. மாறாக, அதனால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம், அவர்களுடன் உடலுறவு கொள்ளுதல், பெண்ணிடமிருந்து குழந்தைக்கு போன்ற வழிகளில் மட்டுமே பரவும். மேலும், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்த பிறகு, அவரது உடலில் இருக்கும் வைரஸும் இறந்துவிடும்.