‘வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!’ - உ.பி-யில் கொல்லப்பட்ட ஆய்வாளரின் கடைசி நிமிடங்கள் | final moments of up inspector subodh kumar singh

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (06/12/2018)

கடைசி தொடர்பு:14:30 (06/12/2018)

‘வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!’ - உ.பி-யில் கொல்லப்பட்ட ஆய்வாளரின் கடைசி நிமிடங்கள்

உத்தரப்பிரதேசத்தில், பசு பாதுகாப்பு தொடர்பாக நடந்த கலவரத்தில், காவல் துறை அதிகாரி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காவலர்

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஹர் மாவட்டத்தின் மஹாவ் என்ற கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் கன்றுகள், பசுக்களின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என கடந்த 3-ம் தேதியன்று அந்த மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில், பொதுமக்கள் மற்றும் சில இந்து அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.  இந்தப் போராட்டம் திடீர் கலவரமாக மாறியதால்,  போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சுபோத் குமார் சிங் என்ற காவல் துறை ஆய்வாளர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதே கலவரத்தில், இளைஞர் ஒருவரும் இறந்துள்ளார். 

கலவரம்

இந்த விவகாரம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. முன்னதாக, உயிரிழந்த சுபேத் குமார் சிங், உடலில் துப்பாக்கிக் குண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும் இவர், கடந்த 2014-ம் ஆண்டு மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அடித்துக்கொல்லப்பட்ட அக்லக் வழக்கை விசாரித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருந்தபோதே, சுபோத் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாகவே சில மர்மக் கும்பல் போராட்டத்தில் நுழைந்து காவலரைக் கொலை செய்திருக்கலாம் என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது. 

கலவரம்

இந்நிலையில், இது தொடர்பான  மற்றுமொரு அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. கலவரம் நடந்த இடத்துக்கு 100 மீட்டருக்கு அருகில் நர்ஸரி பள்ளி ஒன்று இருந்துள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கு தினமும் 12.30 மணியளவில் மட்டுமே மதிய உணவு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கலவரம் நடந்த அன்றைய தினம் 11 மணிக்கெல்லாம்  குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். “அன்றைய தினம் முன்னதாகவே குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்படி எங்களுக்கு உத்தரவு வந்தது” என உணவு தயாரித்து வழங்கிய ராஜ்பால் சிங், பி.டி.ஐ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், “கலவரம் நடப்பதற்கு முன்னதாக, அதாவது 11 மணிக்கு குழந்தைகளை விரைவாக வீட்டுக்கு அனுப்பும் படி எங்களுக்கு கல்வி அதிகாரியிடமிருந்து தகவல் வந்தது. அதற்குள் பள்ளிக்கு வெளியில், முன் எப்போதும் இல்லாத வகையில், பலர் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து, நாங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டோம்” என்று பள்ளியின் ஆசிரியர் தேஷ்ராஜ் சிங் கூறியுள்ளார். 

கொல்லப்பட்ட அதிகாரி

கலவரம் நடந்த 3-ம் தேதியன்று எடுக்கப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகிவருகின்றன. முன்னதாக, ஒரு வயலில் போலீஸ் அதிகாரியின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, அதனுள் இருந்த ஆய்வாளர்  சுபேத் குமார் சிங் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் காரில் இருந்து தலைகீழாக விழுந்து கிடக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியளித்தது. அதேபோன்று, தற்போது மீண்டும் ஒரு காட்சி வெளியாகியுள்ளது. அதில்,  போராட்டக்காரர்கள் சிலர் காவலரைத் தாக்கும்போது, பின்னால் இருக்கும் ஒருவர்  “விடாதே அடி அடி, அவனது துப்பாக்கியை எடு” என்று அலறும் சத்தம் மட்டும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், ஒருவர் போலீஸ் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. 

யோகேஷ் ராஜ்

கலவரம் தொடர்பாகச் சிலரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். பசுவின் உடல் பாகங்கள் தொடர்பாக முதலில் புகார் அளித்த யோகேஷ் ராஜ் என்பவர்தான் காவலரைக் கொலைசெய்ததாக போலீஸார் அவரைத் தேடிவந்தனர். ஆனால், யோகேஷ் ராஜ் இத்தனை நாள் தலைமறைவாக இருந்தார். நேற்று,  ‘கலவரத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், போராட்டம் நடந்தபோது தான் அப்பகுதியில் இல்லை’ எனவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

முதல்வருடன் கொல்லப்பட்ட காவலர் குடும்பம்

இதற்கிடையில், காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கின் மனைவி மற்றும் மகன்  ஆகியோர், இன்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாகத் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாவதால், இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் சற்று திணறிவருகின்றனர். 
 


[X] Close

[X] Close