வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (06/12/2018)

இறந்தது போல் நாடகமாடிய தொழிலதிபர்! - கையும் களவுமாகப் பிடித்த போலீஸார் #Chandigarh

இன்சூரன்ஸ் பணத்துக்காக தான் இறந்தது போல் நாடகமாடிய தொழிலதிபரை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் சண்டிகரில் நிகழ்ந்துள்ளது. 

சண்டிகரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரை ஹரியானாவின் பல்வால் ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் அப்பகுதி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஹரியானா போலீஸார் இணைந்து கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக விவரித்த சண்டிகர் எஸ்.பி ப்ரிமா ஃபேஸ், ``சண்டிகர், நஹான் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற தொழிலதிபரை, அவரிடம் வேலை செய்தவர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக நவம்பர் மாதம் 20-ம் தேதி எங்களுக்குப் புகார் வந்தது. தகவல் அறிந்து நாங்கள் சென்றோம். அங்கு ஒரு கார் தீபிடித்து எரிந்த நிலையில் இருந்தது. நாங்கள் செல்வதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது. அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினோம். 

கொலை நடந்த அடுத்த நாள் தடயவியல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அதே நாளில் ஆகாஷின் குடும்பத்தார் அவரது இறப்புச் சான்றிதழ் வேண்டும் என எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். அப்போதே எங்களுக்குச் சற்று சந்தேகம் வந்தது. இருந்தும் நாள்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த வழக்கில் தொடர் விசாரணை மட்டும் நடைபெற்று வந்தது. ஆகாஷ் இறந்த பிறகு அவரது மருமகன் ரவி குமார் சிறிது நாள்களாக ஊரில் இல்லை. அதனால் அவர் மீது எங்களுக்குச் சந்தேகம் வந்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி ரவி குமார், நஹான் நகருக்கு வந்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக நாங்கள் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றோம். 

விசாரணையின் போது ரவி கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஆகாஷ், இன்ஸூரன்ஸ் பணத்துக்காக ரவியுடன் இணைந்து தன் காரை தானே எரித்துவிட்டு நாடகமாடியுள்ளார். பிறகு சண்டிகரிலிருந்து தப்பி ஹரியானா சென்றுள்ளார் என ரவி எங்களிடம் கூறினார். அதன் பிறகு ரவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஐந்துநாள்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளோம். 

இதற்கிடையில் நேற்று ஹரியானா போலீஸார் மற்றும் பல்வால் ரயில்வே போலீஸார் ஆகியோர் இணைந்து ஹரியானாவிலிருந்து டெல்லி செல்வதற்கு முயன்ற ஆகாஷை பல்வால் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அதன் பின் அவர் சண்டிகருக்கு அழைத்துவரப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளோம். தற்போது ஆகாஷ் மீது மோசடி வழக்கு உட்பட மேலும் மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.