12 லட்சம் பேரின் மனசுக்கு சொந்தக்காரி! - 107 வயதான யூடியூப் ஸ்டார் மஸ்தானம்மா | Worlds oldest youtube star Masthanamma passed away

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (06/12/2018)

கடைசி தொடர்பு:16:10 (06/12/2018)

12 லட்சம் பேரின் மனசுக்கு சொந்தக்காரி! - 107 வயதான யூடியூப் ஸ்டார் மஸ்தானம்மா

107 வயதிலும் கொஞ்சமும் சலிக்காமல் துறுதுறுவென பேசிகொண்டே அசத்தலான சமையல் செய்துகாட்டி, 12 லட்ச மக்களின் மனதை கொள்ளைகொண்ட உலகின் மிகவும் வயதான யூடியூப் ஸ்டார் மஸ்தானம்மா காலமானார்.

மஸ்தானம்மா

``நான் எந்த வேலை செஞ்சாலும் அது கண்டிப்பா வெற்றியடையும். நான் சமைக்குறதுபோல என் குடும்பத்துல வேற யாராலும் சமைக்க முடியாது. பதினோரு வயசுலயே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. என் கணவர் அவங்க குடும்பம் எல்லோரும் ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஆனா, எனக்கு 22 வயசாகும்போது என் கணவர் இறந்துபோய்ட்டார். அவரு உடம்புக்கு முடியாம இருந்தப்போ, `நமக்கு 5 புள்ளைங்க இருக்காங்க இப்படி என்னை தனியா விட்டுட்டு போறீங்களேனு பொலம்புனேன். அதுக்கு, 'நீ ரொம்ப புத்திசாலி. நான் இல்லைனாலும் உன்னால கண்டிப்பா நல்லபடியா வாழமுடியும்'னு ஊக்கப்படுத்தினார்" என்று பதின்வயதுப் பெண்களுக்கே சவால்விடும் அளவுக்கு Non-Stop கலகல பேச்சுக்காரி இந்த மஸ்தானம்மா.

ஆந்திர மாநிலம் குண்டூர் கிராமம்தான் இவரின் சொந்த ஊர். 2016-ம் ஆண்டு, தன் தூரத்து உறவினரான லக்ஷ்மணன் மற்றும் அவரின் நண்பர் ஸ்ரீநாத் ரெட்டி ஆகியோரால், 'Country Foods' எனும் யூடியூப் பக்கம்மூலம் பொதுமக்களுக்கு அறிமுகமானார். சாதாரணமாக வீட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்தே, வித்தியாசமான உணவு வகைகளை செய்வதில் கில்லாடி. ஆயிரக்கணக்கான சமையல் தளங்கள் இருந்தாலும், ருசியான உணவோடு இவரின் தனிப்பட்ட சமையல் ஸ்டைல்தான் இவரை தனித்துக் காட்டியது. இவரின் பலநூறு ரெசிபிகளில் தர்பூசணி சிக்கன், கிராமத்து ஸ்டைல் KFC, பறவை பிரியாணி போன்ற உணவு வகைகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Mastanamma

 

தன் ரசிகர்கள் அவருக்கு அன்பளிப்பாக அனுப்பிய பணத்தை வைத்து, சென்ற ஆண்டு பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடியுள்ளார். கத்தி ஏதும் உபயோகிக்காமல், தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி போன்றவற்றின் தோள்களை தன் கைகளாலேயே உரித்து, தனித்துவமான மசாலாக்களை அரைத்து இவர் செய்து காட்டிய ஒவ்வொரு உணவிலும் மண்மணம் கொஞ்சும்.

இந்த நிலையில், கடந்த ஆறு மாத காலமாக இவரின் எந்தக் காணொலியும் வெளிவராததால், ரசிகர்கள் அவரின் உடல்நிலை குறித்தும் உதவிக்கரம் கேட்டும் யூடியூப் பக்கத்தை நிரப்பினர். நீண்ட காலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மஸ்தானம்மா, காலமான செய்தி அனைவரையும் வருத்தமடைய வைத்திருக்கிறது.