வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (06/12/2018)

கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் - உலக அளவில் 4வது இடத்தில் இந்தியா!

 காற்று மாசுபாடு

காலநிலை மாற்றம், புவி வெப்பமாதல் போன்ற உலகளாவிய பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளியேற்றப்படுவதுதான். பசுமை இல்ல வாயுக்களிலேயே அதிகளவில் வெளியேற்றப்படுவது கார்பன் டை ஆக்ஸைடு. உலகம் முழுக்க பல்வேறு காலநிலை மாற்ற மாநாடுகளிலும் சரி ஆய்வுகளிலும் சரி கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால், தொடர்ந்து வரும் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில்தான் அமைகின்றன. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் குளோபல் கார்பன் ப்ராஜக்ட் (Global Carbon Project) அமைப்பின் ஆய்வும் அதிர்ச்சி முடிவுகளையே தருகின்றன. 

காற்று மாசுபாடு

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 2018-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இந்தியாவுக்கு நான்காவது இடம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6.3% அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டுள்ளது. மொத்த கார்பன் டை ஆக்ஸைடின் அளவு ஏறக்குறைய 2.62 பில்லியன் டன் அளவுக்குச் செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் இந்தியா வெளியேற்றும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், பாரிஸ் ஒப்பந்தத்தின்படி கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த சுற்றுச்சூழல் பொறுப்பில் இருந்து ஏற்கெனவே அமெரிக்கா விலகிவிட்டது. 

உலகளவில், இந்த ஆண்டு CO2 வெளியேற்றம் 37.12 பில்லியன் டன்களைத் தொட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவு கடந்த ஆண்டைவிட 2.7% அதிகம். வழக்கம்போல சீனா 10.3 டன் அளவு CO2 வெளியேற்றி இந்த ஆண்டும் முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட 4.7% அதிகம். அமெரிக்கா 5.4 டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் 3.52 டன் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி மூன்றாவது இடத்தில் உள்ளது. பெட்ரோல், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துவதே பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்துக்குக் காரணம். இதைக் கட்டுப்படுத்துவதில்தான் காலநிலை மாற்றம் கட்டுக்குள் இருக்கும். 

காற்று மாசுபாடு

இதனோடு சேர்ந்து மற்றொரு ஆய்வும் இன்னும் அதிகமான அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. காற்று மாசுபாட்டின் காரணமாக இந்திய குடிமகனின் சராசரி ஆயுட்காலம் 1.7 ஆண்டுகள் குறைந்துள்ளது. சராசரி காற்று மாசுபாடு அளவுக்குக் கீழ் உள்ள இடங்களில் மக்கள் 1.7 ஆண்டுகள் அதிகமாக வாழ்கின்றனர். மேலும் இந்தியாவில் 8 இறப்புகளில் ஒரு இறப்பு காற்று மாசுபாட்டோடு தொடர்புடையது என தி லான்செட் பிளானட்டரி ஹெல்த் (The Lancet Planetary Health) மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டில் மட்டும் 12.4 லட்சம் பேர் காற்று மாசுபாட்டின் காரணமாக இறந்துள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது.