வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (07/12/2018)

கடைசி தொடர்பு:08:11 (07/12/2018)

`எங்கள் நிலத்தில், எங்கள் நிதியில் அணை கட்டுகிறோம்' - கர்நாடக அமைச்சர் காட்டம்!

‘மேக்கே தாட்டூ அணை தொடர்பான முழு விவரங்களையும் தமிழகத்திற்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்’ என கர்நாடக அமைச்சர் சிவகுமார் பேசியுள்ளார்.

சிவகுமார்

கர்நாடகத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கே தாட்டூ என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத் துறையிடம் தாக்கல்செய்து, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியுள்ளது கர்நாடக அரசு. கர்நாடகாவின் இந்தக் கோரிக்கையை ஆய்வுசெய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழகத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டி, அதில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவோடு மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதே நேரத்தில், நேற்று மாலை கர்நாடகாவிலும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மேக்கே தாட்டூ அணை தொடர்பாக பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார்,” மேக்கே தாட்டூ திட்டத்தை நீர்ப்பாசனத்திற்காக நாங்கள் அமல்படுத்தவில்லை. குடிநீர் பயன்பாடு மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவைதான் இதன் நோக்கம்.

தமிழகம் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இந்தத் திட்டம் தமிழகத்துக்கும் பயன் தரும். இது எங்கள் மாநிலத்தின் உரிமை. கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எங்கள் நிலத்தில் எங்கள் நிதியில்தான் அணை கட்ட உள்ளோம். எந்த மாநிலத்தின் மீதும் எங்களுக்கு விரோதம் இல்லை. இதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் கர்நாடகம் அரசியல் செய்யவில்லை. இதுகுறித்த முழு விவரங்களையும் தமிழகத்திற்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் தயாராக இல்லை. இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர்கள்தான். இந்தப் பிரச்னையை நாங்கள் சுமுகமாகத் தீர்க்க நினைகிறோம். தமிழகம் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” எனப் பேசியுள்ளார்.