கேரளாவுக்கு கூடுதலாக ரூ.3,048 கோடி நிதி! - மத்திய அரசு ஒப்புதல் | Central government Announces Rs. 3,048 Crore Flood Relief Fund For Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (07/12/2018)

கடைசி தொடர்பு:08:32 (07/12/2018)

கேரளாவுக்கு கூடுதலாக ரூ.3,048 கோடி நிதி! - மத்திய அரசு ஒப்புதல்

மழை, வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்குக் கூடுதலாக ரூ.3,048 கோடி தருவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

கேரளா மழை

நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டித்தீர்த்த கனமழையால், ஒட்டுமொத்த மாநிலமும் வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போனது. ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 488 பேர் உயிரிழந்தனர். தற்போதுதான் மெள்ள மெள்ள வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆரம்பித்துள்ளது கேரளா. 

கேரளா மழை

இருப்பினும் மழை, வெள்ளப் பாதிப்புகளால் கடும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளது கேரளா. அம்மாநிலத்தின் பிரதான தொழில்களான சுற்றுலா, விவசாயம் உள்ளிட்டவை வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. வெள்ளப் பாதிப்பால் ரூ.20,000 கோடிவரை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளா மழை

இதற்கிடையே, டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் மழை, வெள்ள நிவாரண நிதியாக கேரளாவுக்கு கூடுதலாக ரூ.3,048 கோடி தருவதற்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பேரிடர் நிதியிலிருந்து இந்தத் தொகையைத் தர மத்திய அரசு ஒப்புக்கொண்டது. 

ராஜ்நாத் சிங்

இதேபோல, டிட்டி புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு 539 கோடி ரூபாயும், நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட நாகாலாந்துக்கு 131 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  வெள்ள நிவாரண நிதியாக ஏற்கெனவே கேரளாவுக்கு ரூ.600 கோடி மற்றும் ரூ.562 கோடி மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க