அமித் ஷாவின் யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா! - வழிமொழிந்த நீதிமன்றம் | West Bengal Government reject Permission To Amit Shah yatra

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (07/12/2018)

கடைசி தொடர்பு:14:42 (07/12/2018)

அமித் ஷாவின் யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா! - வழிமொழிந்த நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில், அமித்ஷாவின் தலைமையில் நடக்கவிருந்த யாத்திரைக்குத் தடை விதித்தது, மேற்கு வங்க உயர்           நீதிமன்றம். 

அமித்ஷா

அடுத்த வருடம் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசியக் கட்சிகள் முதல், மாநிலத்தின் சிறிய கட்சிகள் வரை அனைவரும் இப்போதிலிருந்தே தயாராகிவருகின்றனர். இதில், பா.ஜ.க-வும், காங்கிரஸும் அதிக கவனம் செலுத்திவருகிறது. தேர்தலையொட்டி பல மாநிலங்களில் தற்போதிலிருந்தே முக்கிய தேசியக் கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றன. 

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில், மூன்று கட்டங்களாக யாத்திரை நடத்தத் திட்டமிட்ட பா.ஜ.க, மேற்கு வங்க அரசிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், பா.ஜ.க-வின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து, மேற்கு வங்க பா.ஜ.க, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ கொல்கத்தாவில் மதம் சார்ந்த பிரச்னைகளும், மோதல்களும் அவ்வப்போது நடைபெற்றுவருகின்றன. இவற்றைத் தடுக்கவே பா.ஜ.க-வின் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது’ எனக் கூறினார். பின்னர் வாதாடிய பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர், ‘மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அரசின் கடமை’ என வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களும் முடிந்த பின்னர், ’யாத்திரை காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், பா.ஜ.க-வின் யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால், அமித்ஷா உள்பட மேற்கு வங்க பா.ஜ.க-வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி ஆட்சி நடந்துவருகிறது. முன்னதாக, மம்தா பானர்ஜிக்கும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கும் மோதல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.