வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (07/12/2018)

கடைசி தொடர்பு:15:35 (07/12/2018)

`3 ஆண்டுகளில் 100 விமானங்கள்..!’ - விமானச் சேவையில் கலக்கும் இண்டிகோ

ண்டிகோ விமான நிறுவனம், 200  விமானங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு விமான நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 

இண்டிகோ

இந்தியாவில், குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் செய்பவர்களின் விருப்பத் தேர்வாகவும், அதிக அளவில் உள்நாட்டு சேவைகளை இயக்கும் நிறுவனமாகவும் இண்டிகோ விமான நிறுவனம் திகழ்கிறது. 

இந்த நிலையில், இந்த நிறுவனம், தனது பயணிகள் சேவைகள் பயன்பாட்டுக்காக ஏ 320 சிஇஓ ரக விமானங்கள் இரண்டையும், ஏ 320 என்இஓ ரக விமானங்கள் இரண்டையும் புதிதாக வாங்கி சேர்த்துள்ளது. இந்த 4 புதிய விமானங்களின் வருகை மூலம் 200  விமானங்களைக் கொண்ட முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ விமான நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்திய உள்நாட்டு விமான சேவையில் 40% பங்களிப்பைக் கொண்டுள்ள இண்டிகோ நிறுவனம், கடந்த 2015, டிசம்பர் 24-ம் தேதியன்று தனது 100 -வது விமானத்தைப் பயணிகள் சேவையில் இணைத்தது. இந்த நிலையில், மேலும் 100 விமானங்களை வாங்குவதற்கு தங்களுக்கு வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய விமானங்களின் வருகைக்கு முன்னதாக இண்டிகோ நிறுவனத்திடம் 123  ஏ 320 சிஇஓ ரக விமானங்கள், 61  ஏ 320 என்இஓ ரக விமானங்கள் உள்பட மொத்தம் 196 விமானங்கள் இருந்தன. இண்டிகோ நிறுவனம், தற்போது 63 இடங்களுக்கு 1,200 விமான சேவைகளை இயக்குகிறது. இதில், 49 சேவைகள் உள்நாட்டிலும், 14 சேவைகள் சர்வதேச நாடுகளுக்குமாக உள்ளன.  

2006, ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியன்று டெல்லி - இம்பால் இடையே தனது முதல் சேவையைத் தொடங்கிய இண்டிகோ, 2018, அக்டோபர் மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை ஏற்றி, உள்நாட்டு விமான சேவை சந்தையில் 43% பங்களிப்பைக் கொண்டிருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

அதிகரித்த விமான எரிபொருள் விலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்தியாவில் செயல்படும் விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளபோதிலும், இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் லாபகரமாகச் செயல்படும் ஒரே இந்திய விமான நிறுவனமாக இண்டிகோ திகழ்கிறது. 

முன்னதாக நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா விமான நிறுவனப் பங்குகளை வாங்க முன்வந்த இண்டிகோ, பின்னர் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது. ஏர் இந்தியாவின் வெளிநாட்டு போக்குவரத்தை கைப்பற்றுவது மட்டுமே  இண்டிகோ நிறுவனத்துக்குக்  குறிக்கோள். ஆனால், மத்திய அரசு நிறுவனத்தைப் பிரிக்காமல் மொத்தமாக ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை வாங்க வேண்டும் எனக் கூறியது. உள்நாட்டில் கணிசமான சந்தையை வைத்திருக்கும் இண்டிகோ, உள்நாட்டு போக்குவரத்தையும் வாங்குவதினால் ஆதாயம் ஏதும் இருக்காது எனக் கருதியது.

இது தவிர, மத்திய அரசு வெளியிட்டுள்ள பல விதிமுறைகள் மற்றும் ஏர் இந்தியாவின் நிலைமையும் வாங்கும் நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கவில்லை என்பதால்,  இண்டிகோ அந்த முடிவைக் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க