`பின்தங்கும் பி.ஜே.பி... முன்னேறும் காங்கிரஸ்...’ - ஐந்து மாநிலத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்! | Exit poll about five state election

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:56 (08/12/2018)

`பின்தங்கும் பி.ஜே.பி... முன்னேறும் காங்கிரஸ்...’ - ஐந்து மாநிலத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

 

தேர்தல்

டிசம்பர் 11-ம் தேதிக்காக, நாடு காத்திருக்கிறது. அன்றுதான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரோம் ஆகிய  5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகின்றன. முன்னதாக, சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 28-ம் தேதி, மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரோமில் வாக்குப்பதிவு முடிந்தது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில், டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

அவற்றின் முடிவுகள் இதோ... `மத்தியப் பிரதேசத்தில், ஆளும் பி.ஜே.பி-க்கு செம டஃப் கொடுக்கிறது காங்கிரஸ். மொத்தம் இருக்கும் 230 இடங்களில், பி.ஜே.பி-க்கும் காங்கிரசுக்கும் சம அளவில் போட்டி நிலவுகிறது. பி.ஜே.பி 104 - 122 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், காங்கிரஸ் 102 - 120 இடங்களைப் பிடிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில், ஆளுங்கட்சியாக இருக்கும் பி.ஜே.பி பெரிய சரிவை சந்திக்கிறது.

அங்கு, காங்கிரஸ் 119 - 141 இடங்களை வென்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.ஜே.பி, 55 - 72 இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கரிலும் ஆளுங்கட்சியான பி.ஜே.பி பின்தங்குகிறது. அங்கே, 90 தொகுதிகள் இருக்கின்றன. அதில், 50 - 65 இடங்களை காங்கிரஸ் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 - 31 இடங்களை பி.ஜே.பி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில், தற்போதைய முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கே மீண்டும் ஜெயம் என்று சொல்லப்பட்டுள்ளது. அவரது டி.ஆர்.எஸ் கட்சி, 79 - 91 பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகள் இருக்கும் மிசோரோமில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கே இம்முறை, மிசோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அக்கட்சி, 16 - 22 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.