வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:10:54 (08/12/2018)

பா.ஜ.க ரதயாத்திரை விவகாரம் - கொல்கத்தா உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

மேற்குவங்கத்தில் பி.ஜே.பி-யின் ரதயாத்திரைக்கு மாநில அரசு தடைவிதித்த விவகாரத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

நீதிமன்றம்

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேற்குவங்கத்தில் மூன்று ரதயாத்திரைகளை நடத்தும் அறிவிப்பை பி.ஜே.பி வெளியிட்டது. அதன் படி, கூச்பெஹார் (டிசம்பர் 7) , பர்கனாஸ் (டிசம்பர் 9), பிர்பம் (டிசம்பர் 14) ஆகிய இடங்களில் ரதயாத்திரை நடத்தப்பட இருந்தது. அதில் பங்கேற்பதற்காக, பி.ஜே.பி தலைவர் அமித்ஷா மேற்குவங்கம் வர இருந்த நிலையில், “ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது” என்று, முதல்வர் மம்தா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். பி.ஜே.பி அனுப்பிய அனுமதிகோரல் கடிதத்தையும் நிராகரித்தார். 

மம்தா

உடனே, பி.ஜே.பி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், மாநில அரசின் உத்தரவை உறுதிசெய்வதாக, தனிநீதிபதி தபபரா சக்ரபர்த்தி உத்தரவிட்டார். “ரதயாத்திரையை அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். அதனால், மாநில அரசின் உத்தரவு சரியே” என்று, அவர் தெரிவித்தார். இதையடுத்து பி.ஜே.பி, டிவிஷன் பெஞ்சில் முறையிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஸ்வநாத் மற்றும் முகர்ஜி அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். “பி.ஜே.பி ரதயாத்திரை மற்றும் பேரணிக்கு மாநில அரசு தடைவிதித்தது ஆச்சர்யமளிக்கிறது. அது குறித்து, மாநிலத் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறைத் தலைவர் அடங்கிய மூவர் குழ, டிசம்பர் 12-ம் தேதி பி.ஜே.பி பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க வேண்டும். அதன் முடிவை, டிசம்பர் 14-ம் தேதி வெளியிட வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.