50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்! | 200 chartered flights 1000 luxury cars booked for isha Ambani marriage

வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:26 (08/12/2018)

50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்!

அம்பானி குடும்பத்தின் திருமண நிகழ்வால் ஏரிகள் நிறைந்த உதய்பூர் நகரம் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது.

50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்!

ந்தியாவின் மிக அழகான நகரங்களுள் ஒன்று உதய்பூர். ராஜஸ்தானின் ஏரிகள் நிறைந்த இந்த நகரைப் பார்த்தாலே மனசு துள்ளும். ஹோட்டல்கள்கூட அரண்மனை வடிவில் கலை அழகுடன் கட்டப்பட்டிருக்கும். மேவார் பகுதியை ஆண்ட மகராணா உதய்சிங் கி.பி. 1559-ம் ஆண்டு இந்த நகரை உருவாக்கினார். ராஜஸ்தானில் குஜராத் எல்லையையொட்டி அமைந்துள்ள உதய்பூரை தார் பாலைவனத்தில் இருந்து ஆரவல்லி மலைக்குன்றுகள் பிரிக்கிறது.  

உலக மகா கோடீஸ்வரர்களில் ஒருவரான  முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூரில் இரு நாள்கள் திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்காக, உதய்பூரில் பிரமாண்ட மேடைகள் அழகுற அமைக்கப்பட்டு கண் கவரும் அலங்காரத்துடன் மின்னுகின்றன. 

அம்பானி குடும்பம்

இஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பிதழின் விலையே ரூ.3 லட்சம். இவ்வளவு விலை மதிப்பில் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களைத்தான் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் குருவாயூர், திருப்பதி கோயில்களில் வைத்துச் சிறப்பு பூஜை நடத்தினார் முகேஷ் அம்பானி. திருமணத்துக்குப் பிறகு மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ரூ.450 கோடி மதிப்புள்ள பங்களாவில் இஷா கணவருடன் வசிக்கப் போகின்றார். வீட்டுக்கு வரும் மருமகளுக்காக ஆனந்த் பிரமாலின் தந்தை அஜய் பிரமால் வீட்டைப் பார்த்து பார்த்துக் கட்டியுள்ளார்.  

ராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் இருந்து அம்பானி மற்றும் பிரமால் குடும்பத்தினர் தனி விமானங்களில் உதய்பூர் செல்கின்றனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் உதய்பூர் செல்ல 30 முதல் 50 தனியார் விமானங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. ஒரு நாளைக்கு 19 லேண்டிங் மற்றும் டேக் ஆஃப்தான் உண்டு. அம்பானி குடும்பத்தினர் வருகையால், அடுத்த 5 நாள்களுக்குத் தனியார் விமானங்கள் 200 முறை டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும் வகையில் ஷெட்யூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

அம்பானி குடும்ப திருமண நிகழ்வு நடைபெறும் உதய்பூர் நகரம்

திருமணத்தில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து 1000 சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகின்றனர். இதனால், உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் அம்பானி குடும்பத்தினரே வாடகைக்கு எடுத்துள்ளனர். விருந்தினர்களுக்கு எந்த வசதிக் குறைவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக தனிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களின் பயன்பாட்டுக்காக இந்திய தயாரிப்பு கார்கள் எல்லாம் பயன்படுத்தப் போவதில்லை. ஜாகுவார், பி.எம். டபிள்யூ, மெர்ஸிடெஸ் பென்ஸ், ஆடி கார்கள் மட்டும் 1000 கார்கள் புக் செய்யப்பட்டுள்ளன. 

பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, உதய்பூர் விமான நிலையத்தில் குட்டி விமானங்கள் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கப் போகின்றன. அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்டோர் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்கப் போகும் வெளிநாட்டு அரசியல் பிரபலங்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் என உதய்பூர் களைக்கட்டப் போகிறது. 

அம்பானி மகள்

உதய்பூரில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் முடிந்த பிறகு மும்பையில் வரும் 12-ம் தேதி அம்பானியின் வீட்டிலேயே இஷா, ஆனந்த் பிரமால் திருமண நிகழ்வு நடைபெறவிருக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்