ரகுராம் ராஜனின் ஸ்டூடன்ட்; கார்ப்பரேட் பொறுப்புகள்! - புதிய பொருளாதார ஆலோசகரைச் சுற்றும் சர்ச்சை | krishnamurthy subramanian appointed as india's new chief economic advisor

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (08/12/2018)

கடைசி தொடர்பு:15:30 (08/12/2018)

ரகுராம் ராஜனின் ஸ்டூடன்ட்; கார்ப்பரேட் பொறுப்புகள்! - புதிய பொருளாதார ஆலோசகரைச் சுற்றும் சர்ச்சை

அரவிந்த் சுப்ரமணியத்தின் ராஜினாமாவை அடுத்து இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

photo credit: ‏@BrookingsIndia

இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியம் கடந்த ஜூன் மாதம் பதவி விலகினார். மோடியின் ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளின்போது அரசுக்குத் தனது ஆலோசனை வழங்கிய அரவிந்த் சுப்ரமணியம் திடீரென பதவி விலகுவதற்குக் காரணம் என்ன சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாகக் கூறியதுடன், பதவி விலகிய பின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து தனக்கு எதிராக எழுந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில்தான் சுமார் ஆறு மாத காலம் கழித்து இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். இவர் அடுத்த மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் நீட்டிப்பார் என அறிவித்துள்ளது நிதி அமைச்சகம். கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியதுக்கு பதவி அளிக்கப்பட்டது குறித்து தற்போது சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அந்த சர்ச்சை குறித்த பின்னணியைப் பார்ப்போம்.

அரவிந்த் சுப்ரமணியன்

யார் இந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்?

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தவர்தான் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். படிப்பில் படு கெட்டிக்காரரான இவர், ஐ.ஐ.டி கான்பூரில் எலெட்ரிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றார். அடுத்து ஐ.ஐ.எம் கொல்கத்தாவில் எம்.பி.ஏ படித்து டாப் ரேங்கில் தேர்ச்சி பெற்றார். வழக்கம் போல் இன்ஜினியரிங் + எம்பிஏ படித்தவர்களுக்கு என்ன கனவு இருக்குமோ அதே தான் இவருக்கும் இருந்தது. அமெரிக்கா பறந்தார். சிகாகோ பல்கலைக்கழத்தில் இணைந்தார். அங்கு நிதி மற்றும் பொருளாதாரத்தில் பிஹெச்டி ஆய்வில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். பிஹெச்.டி ஆய்வில் இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. 

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்தான் கிருஷ்ணமூர்த்தியின் பிஹெச்.டி வழிகாட்டி. பிஹெச்.டி முடித்த பின் நியூயார்க்கில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் ஐ.ஐ.சி.ஐ வங்கியின் உயர் பொறுப்புகளில் சில ஆண்டுகளில் பணி என இருந்தவர் வங்கி, பெருநிறுவன ஆளுமை மற்றும் பொருளாதார கொள்கையில் நிபுணத்துவம் நிறைந்தவராகத் தன்னை வடிவமைத்துக்கொண்டார். சர்வதேச அளவில் புகழ் பெற்றார். இந்தக் காலகட்டங்களில்தான் செபி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட இந்திய பொருளாதார உயர் அமைப்புகளின் நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய பிசினஸ் ஸ்கூலான இந்திய வர்த்தக கல்வி நிலையத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

photo credit: @ISBInsight

இவரைத்தான் இந்தியாவின் தலைமை ஆலோசகராக நியமித்துள்ளது நிதி அமைச்சகம். இத்தனை பொறுப்புகளில் இருந்துள்ளாரே அவர் நியமனத்தில் என்ன சர்ச்சை ஏன் எனக் கேட்கலாம். நிதியமைச்சருக்கு இணையான பதவிதான் இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவி. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்; எந்த வகையில் இருக்க வேண்டும். இந்த வளர்ச்சியை எப்படி எட்டுவது போன்ற முக்கியமான ஆலோசனைகளை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அளிக்கக்கூடிய பதவிதான் இது. அரசியல் பேதமின்றி தனது ஆலோசனைகளைத் தைரியமாக அரசுக்குக் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட பொறுப்புக்கு இதுவரை வந்தவர்கள் பிறநாடுகளுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பொருளாதார ஆலோசர்களாக இருந்தவர்கள்

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட அமைப்புகளில் சில பொறுப்புகள் வகித்தாலும், பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலோ அல்லது சில வங்கிகளிலோ சில பொறுப்புகளை மட்டும் வகித்துள்ளார். இப்படிப்பட்டவரை நிதி அமைச்சருக்கு இணையான பதவிக்கு தேர்வு செய்ததுதான் தற்போது சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது. எது எப்படியோ இவர்தான் இந்தியாவின் பொருளாதார ஆலோசகர் என நிதி அமைச்சகம் அறிவித்துவிட்டது. இன்னும் ஒருசில மாதங்களில் இந்தியா பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது. அதற்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தியா பொருளாதாரத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் இவரின் பணி பெரும் சவாலாகவே இருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க