‘அவரை முதலில் இடமாற்றம் செய்யுங்கள்!’ -உ.பி காவலர் கொலை வழக்கில் தொடர் அதிர்ச்சி | local BJP leaders had demanded Inspector Subodh Kumar Singh transfer

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (09/12/2018)

கடைசி தொடர்பு:08:45 (09/12/2018)

‘அவரை முதலில் இடமாற்றம் செய்யுங்கள்!’ -உ.பி காவலர் கொலை வழக்கில் தொடர் அதிர்ச்சி

உத்தபிரதேசத்தில் நடந்த கலவரத்தின் போது கொலை செய்யப்பட்ட காவலர் கொலை வழக்கில் தொடர்ந்து பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

காவலர் சுபோத் குமார் சிங்

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஹர் மாவட்டத்தின் மஹாவ் என்ற கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் கன்றுகள், பசுக்களின் உடல் பாகங்கள் கிடந்துள்ளன. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என கடந்த 3-ம் தேதியன்று அந்த மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில், பொதுமக்கள் மற்றும் சில இந்து அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் திடீர் கலவரமாக மாறியதால், போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் சுபோத் குமார் சிங் என்ற காவலரும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரும் கொலை செய்யப்பட்டார். அன்று நடந்த கல்வீச்சு தாக்குதலில்தான் காவலர் இறந்ததாக முன்னதாக கூறப்பட்டது. பிறகு நடந்த பிரேத பரிசோதனையில், சுபோத் குமார் தலையில் துப்பாகி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. கலவரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பசுவின் உடல் பாகங்கள் தொடர்பாக முதலில் புகார் அளித்த யோகேஷ் ராஜ் என்பவர்தான் காவலரை கொலைசெய்ததாகக் கூறப்பட்டது. கலவரம் நடந்த தினம் முதல் இதுவரை அவரைக் காணவில்லை. யோகேஷ் ராஜை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வன்முறை நடந்த போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி போலீஸாரை பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளது. வீடியோ காட்சிகளால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். காவலர் கொலையில் ராணுவ வீரர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜித்து பவுஜி என்ற ராணுவ வீரரும் ஒரு வீடியோவில் இருந்துள்ளார். கலவரம் நடந்த போது ஜித்து அந்தப் பகுதியில் இருந்ததை அவரின் உறவினர் ஒருவர் உறுதி செய்துள்ளார். பிறகு அன்றைய இரவே ஜித்து உ.பியில் இருந்து கார்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இன்று காலை ராணுவ வீரர் ஜித்து கைது செய்யபட்டுள்ளார். 

இந்நிலையில் காவலர் கொலை தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இறந்த காவலர் சுபோத் குமார் சிங் சில வருடங்களுக்கு முன்னதாக மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அடித்துக்கொல்லப்பட்ட அக்லக் வழக்கை விசாரித்துள்ளார். மேலும் அவர் கண்டிப்பான காவலராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பி.டி.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்த புலந்த்ஹர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங், “ கலவரத்தில் கொலை செய்யபட்ட காவலர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக புலந்த்ஹர் பகுதி பாஜகவினர் எம்.பி போலா சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சுபோத் குமார் சிங் மதரீதியான பண்டிகை, கூட்டங்களுக்கு விரோதமாக கடும் இடையூறுகள் செய்கிறார். அதனால் அவரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். இதை எம்.பி போலா சிங் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தக் கடிதம் தொடர்பாக விசாரணை கூட இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் சுபோத் குமார் இறந்துவிட்டார்” என பேசியுள்ளார். 

கலவர வழக்கில் மிகவும் அலட்சியமாகச் செயல் பட்டதாக அம்மாவட்ட மூத்த எஸ்.பி கிருஷ்ண பகதூர் சிங், சர்கிள் அதிகாரி சத்ய பிரகாஷ் ஷர்மா, மற்றொரு போலீஸ் அதிகாரி சுரேஷ் குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருந்தும் இந்த வழக்கில் கொலையாளியை கண்டு பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


[X] Close

[X] Close