`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு! | aravind subramaniyan statement about gdp calculation

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/12/2018)

கடைசி தொடர்பு:08:28 (10/12/2018)

`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு!

'ரிசர்வ் வங்கியானது வலிமையான தன்னாட்சி அமைப்பாக இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது. அதன் சுயாட்சி மற்றும் சுதந்திரம் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜி.டி.பி புள்ளி விவரங்கள் குழப்பத்துடன் இருக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டும்' என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

அரவிந்த் சுப்பிரமணியன்

சமீபத்தில் மத்திய புள்ளியியல் நிறுவனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டது. 2004 - 2005 க்குப் பதிலாக 2011 - 2012 ம் ஆண்டை அடிப்படையாக வைத்து பொருளாதார அறிக்கையை வெளியிட்டது மத்திய அரசு. இதைக் கொண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விடவும் பா.ஜ.க ஆட்சியில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், பொருளாதார வளர்ச்சி குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரக் கணக்கீட்டை எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தனர். இது பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.

இது குறித்து மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கூறியதாவது...

``ஒரு பொருளாதார நிபுணராக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்கள் குறித்து குழப்பமும், சந்தேகங்களும் எழுந்தால் அதை விளக்க வேண்டியது அவசியம். ஜி.டி.பி கணக்கிடுவதில் உள்ள சந்தேகங்கள் மற்றும் நிலையற்ற சூழல் நிலவுவதைத் தவிர்த்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். முறையான பொருளாதார வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரவிந்த் சுப்ரமணியன்

ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவது மிகக்கடினமான மற்றும் தொழில்நுட்பச் சிக்கல் நிறைந்த பணி. பொருளாதார புள்ளிவிவரங்கள் குறித்த பணிகள் தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு செய்ய வேண்டும். பொருளாதார நிபுணத்துவம் இல்லை என்ற நிலையில், அரசு நிறுவனங்கள் ஜி.டி.பி கணக்கிடும் முறையில் தலையிடக்கூடாது. சமீபகாலமாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே உரசல் போக்கு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கியின் சுயாட்சி மற்றும் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்" என்று விமர்சித்திருக்கிறார்.

“ஆப் கவுன்சில்: தி சேலஞ்சஸ் ஆப் தி மோடி - ஜேட்லி எக்கானமி” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார் அரவிந்த் சுப்ரமணியன். அந்தப் புத்தகத்தில் பண மதிப்பிழக்கம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் பல அடங்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க