மத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா! | Urjit Patel resigns as RBI governor

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:17 (10/12/2018)

மத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா!

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில்தான் ஆளுநர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, ஆர்.பி.ஐயின் 24வது ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டவர் உர்ஜித் படேல். நிரவ்மோடி விவகாரம், பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுடன், உர்ஜித் படேலுக்கு முரண்பட்ட கருத்துகள் நிலவி வந்தன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.பி.ஐ துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, `ஒரு நாட்டின் மத்திய வங்கியைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்' என்று தெரிவித்தார்.

ராஜினாமா

 

இந்நிலையில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமான மோதல் போக்கு வெளிப்படையாகத் தெரிய வந்தது. கடந்த அக்டோபர் மாதமே அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில். இன்று தனது ராஜினாமாவை அதிகாரபூர்வமாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர், ``பல்வேறு சொந்தக் காரணங்களுக்காக, பொறுப்பிலிருந்து விலக முடிவு செய்தேன். ஆர்.பி.ஐ ஆளுநராகப் பொறுப்பு வகித்ததைப் பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். கடந்த ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் வளர்ச்சிக்கு, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நிர்வாகத்தினரின் கடின உழைப்புதான் காரணம். என்னுடன் பணியாற்றிய சக ஊழியர்கள், ரிசர்வ் வங்கி இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். மத்தியப் பொருளாதார விவகாரத்துறை ஆலோசகராக இருந்த சக்தி காந்ததாஸ் ஆர்.பி.ஐயின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.உர்ஜித் படேல் ராஜினாமா வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.