வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (10/12/2018)

கடைசி தொடர்பு:18:59 (10/12/2018)

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்!

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வாராக்கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு உதவுவதற்கு என தனித் திட்டம் தேவை என அரசு தரப்பில் முக்கியக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி தரப்பில் அப்படியான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

மத்திய அரசு மீதான அதிருப்தி காரணமாக, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமிடையே உரசல் போக்கு இருந்துவந்தது. ரிசர்வ் வங்கிக்கென கவர்னர் இருக்கும்போது, சுயச்சார்பு கூடுதல் இயக்குநராக குருமூர்த்தி நியமிக்கப்பட்டார். அந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. அடுத்ததாக, ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருக்கும் புரவிசன் தொகையை வாராக்கடன்களைக் குறைப்பதற்காக வங்கிகளுக்கு வழங்கும்படி மத்திய அரசு நெருக்கடிகொடுத்ததாகப் புகார் எழுந்தது. ஆனால், அதை மத்திய அரசு மறுத்தது. 

உர்ஜித் படேல்

சமீபத்தில், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வாராக்கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு உதவுவதற்கு என தனித் திட்டம் தேவை என அரசு தரப்பில் முக்கியக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற ரிசர்வ் வங்கியின்  கூட்டத்திலும் இதற்கான முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அரசின் பிரதிநிதிகளும் அதை வலியுறுத்தினார்கள். ஆனால், ரிசர்வ் வங்கி தரப்பில் அப்படியான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. 

உர்ஜித் படேல்

ரிசர்வ் வங்கி சார்பில், அதன் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பேசும்போது, "வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப்புழக்க பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக, முதலீடுகள் மற்றும் கடன் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதனால், பணப்புழக்க நெருக்கடி குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆகவே, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக தனித்திட்டம் தேவையில்லை. அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்காத பட்சத்தில்தான், கடைசிக் கட்டமாக மட்டுமே ரிசர்வ் வங்கியின் உதவிக்கரம் நீளும்" என்று கூறினார். இதை மத்திய அரசு எதிர்பார்க்கவில்லை. இதுவும் ரிசர்வ் வங்கியுடனான மத்திய அரசின் மோதலை வலுக்கச்செய்தது. உர்ஜித் படேலின் ராஜினாமாவிற்கு இதுவே முக்கியக் காரணமாக இருக்குமென நம்பப்படுகிறது. எனினும், தனது சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.