வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (11/12/2018)

கடைசி தொடர்பு:07:02 (11/12/2018)

மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆப்சென்ட் - மெகா கூட்டணிக்குத் தயாரான 21 கட்சிகள்!

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் பா.ஜ.க-வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருக்கின்றன. அதனால் டெல்லியில் 21 கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்காமல் புறக்கணித்திருக்கிறார். 

மெகா கூட்டணி

வரும் 2019 -ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ், தி.மு.க, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சரத் யாதவின் மதச்சார்பற்ற லோக் தந்திரிக் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு சந்திரபாபு நாயுடு  அழைப்பு விடுத்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது. அதே வேளையில் குளிர்கால கூட்டத்தொடரும் கூடவிருக்கிறது. இந்தப் பரபரப்பான சூழலில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்தார். அதன்படி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் கூடினார்கள்.  

இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சந்திரபாபு நாயுடு, மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, தேவகவுடா, சரத்பவார், பரூக் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். எனினும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2019 - நாடாளுமன்றத் தேர்தல், வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தல், பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க