`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி!'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை | Tamilisai about Five state election

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (11/12/2018)

கடைசி தொடர்பு:14:57 (11/12/2018)

`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி!'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.க ஆளக்கூடிய ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மாறும் சூழல் உருவாகியுள்ளது.  

மோடி, ராகுல்
 

`தாமரை மலர்ந்தே தீரும்’ என்னும் வாக்கியத்தைத் தாரக மந்திரமாக உச்சரித்து வரும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை  மகாகவி பாரதியாரின் 137 வது பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இன்றைய தேர்தல் முடிவுகள் பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசியது.. 


தமிழிசை

``வெற்றியால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதும் இல்லை; தோல்வியால் துவள்வதும் இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இப்போதுதான் பாரதியாருக்கு மரியாதை செலுத்திவிட்டு வருகிறேன்.  `அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’ என்ற அவரின் கூற்றை இங்கு நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த காலகட்டத்தில் எவ்வளவுதான் தோல்விகள் வந்து கவ்விக் கொண்டாலும் அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெறுவோம். இன்று 5 மாநிலத்தில் நடந்த தேர்தல் எந்த விதத்திலும் எங்களுக்குத் தோல்வியைத் தராது. 

மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே மாநில அளவிலாக சில பிரச்னை நிலவுகிறது. அதனால்தான் பா.ஜ.க இழுபறியைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை Neck to Neck நிலவரம்தான்.  காங்கிரஸைவிட மிகவும் குறைவான சதவிகிதம்தான் பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்துள்ளது.  இந்த தோல்வியை வெற்றிகரமான தோல்வியாக தான் எடுத்துக்கொள்ள முடியும்.  மத்தியப்பிரதேசத்திலும் அப்படிதான். சத்தீஸ்கரில் எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தது வேறு. நடந்தது வேறு. மேலும், பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் அமைத்துக்கொண்டிருக்கும் கூட்டணி வெற்றிபெறும் என இவர்கள் சொல்வது பொய் என்று தெலங்கானா நிரூபித்திருக்கிறது. அங்கு  கூட்டணி தோல்வியைத் தழுவியிருக்கிறது.

தமிழிசை
 

எதிர்க்கட்சிகளைப் பார்த்து நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். இன்று வாக்கு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா. பா.ஜ.க வெற்றிபெற்றபோது மட்டும் எங்களுக்கு வாழ்த்துச் சொல்லாமல் இயந்திரங்களுக்கு வாழ்த்துச் சொல்லி எங்களின் வெற்றியைக் கொச்சைப்படுத்தினார்கள். இன்று அவர்கள் வெற்றிபெறும்போது மட்டும் கொண்டாடுகிறார்கள். எங்கள் தலைவர்கள், தொண்டர்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்தி இயந்திரத்தால் தான் வென்றோம் என்று இயந்திரத்தனமாக குற்றம்சாட்டியவர்கள் இன்று மட்டும் வாய்திறக்கவில்லையே. எங்களைக் கொச்சைப்படுத்திய காங்கிரஸ் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இன்னொன்றும் சொல்கிறேன். தற்போது தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அங்கு ராகுல் பிரதமராக முன்னிறுத்தப்படவில்லை. அங்குள்ள மக்கள் அதே கருத்துக்கணிப்பில் மோடியைதான் பிரதமராக வேண்டும் என்று சொல்கிறார்கள். எனவே, இன்றைய தோல்வி எங்களை எதுவும் செய்துவிடாது. காங்கிரஸுக்கு மிகக் கடுமையான போட்டியைத்தான் நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம்” என்று முடித்தார் ஆதங்கத்துடன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க