‘வாக்கு இயந்திரத்தில் முறைகேடு’ - தெலங்கானா காங்கிரஸ் புகார் | Telangana Congress demanded re counting of Voter Verifiable Paper

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (11/12/2018)

கடைசி தொடர்பு:16:52 (11/12/2018)

‘வாக்கு இயந்திரத்தில் முறைகேடு’ - தெலங்கானா காங்கிரஸ் புகார்

மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது, தெலங்கானா காங்கிரஸ். 

காங்கிரஸ்

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை முதல் நடைபெற்றுவருகிறது. இதில், மிசோரமில் எம்.என்.எஃப் கட்சியும், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைக்க உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பா.ஜ.க-வும் காங்கிரஸும் மாறி மாறி முன்னிலை வகித்துவருகின்றன. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள மொத்தம் 119 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 86 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.  அதிகப் பெரும்பான்மையுடன் சந்திரசேகர ராவ் ஆட்சியமைக்க உள்ளார். காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 

சந்திர சேகர ராவ்

யாரும் நினைத்துப்பார்க்காத அளவு தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றுள்ளது. அதனால், அங்கு மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தெலங்கானா காங்கிரஸ் கட்சி, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. 

உத்தம் குமார் ரெட்டி

மேலும், இது தொடர்பாகப் பேசிய தெலங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, “ தெலங்கானாவில் நடைபெற்ற வாக்குப் பதிவின்போது மின்னணு இயந்திரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதனால், தணிக்கை சீட்டு மூலம் மீண்டும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸின் அனைத்து வேட்பாளர்கள் சார்பில் கடிதம் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

புகார் கடிதம்