' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்!' - விவரித்த ராகுல் காந்தி | Narendra Modi taught me a lesson said rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (12/12/2018)

கடைசி தொடர்பு:15:45 (12/12/2018)

' மோடியிடம் கற்றுக் கொண்ட 2 பாடங்கள்!' - விவரித்த ராகுல் காந்தி

‘நான் மோடியிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். அவர் மக்களின் இதயத்துடிப்பை கேட்கத் தவறிவிட்டார்’ என ராகுல் காந்தி பேசியுள்ளார். 

ராஹுல் காந்தி

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் இன்னும் இழுபறியே நீடித்து வருகிறது. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஓராண்டுக்குப் பிறகு முதன்முதலாக பெரும் வெற்றியைச் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். 

இதற்கிடையில், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, `` 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்தான் நான் சந்தித்த மிகச் சிறந்த தேர்தல். அந்தத் தேர்தலின் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் மனநிலை என்ன என்ற மிக முக்கிய விஷயத்தை நான் தெரிந்துகொண்டேன். நரேந்திர மோடிதான் இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவர் செய்யும் செயல்களின் மூலம் நான் அதைச் செய்யக்கூடாது என்ற விஷயத்தைப் புரிந்துகொண்டேன். இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல அவர் சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். மோடி, மக்களின் இதயத்துடிப்பை கேட்கத் தவறிவிட்டார்.  என்னைப் பொறுத்தவரையில் மக்கள்தான் மிகச் சிறந்த ஆசிரியர்கள். 

மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே நிலையே தொடரும். பா.ஜ.க ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டு செயல்படுகிறது. நாங்கள் அதை எதிர்த்துப் போராடி, வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.