வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (12/12/2018)

கடைசி தொடர்பு:15:48 (12/12/2018)

ம.பி-யில் 24 மணி நேரமாகத் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை - கடும் இழுபறிக்குப் பிறகு வென்ற காங்கிரஸ்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே தொடர்ந்து வந்த இழுபறிக்குப் பிறகு, அம்மாநிலத்தின் இறுதி முடிவுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். 

காங்கிரஸ்

ஆட்சிக் காலம் முடிந்த மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் நேற்று ஒரே நாளில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியும் மிசோரமில் எம்.என்.எஃப் கட்சியும் முன்னிலை பெற்றது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே போட்டி தொடங்கியது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னோக்கி சென்றுகொண்டிருந்தது. பிற்பகலுக்குப் பிறகு தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சி முழு பெரும்பான்மை பெற்றது. அதேபோல் மிசோரமில் எம்.என்.எஃப் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.

ஆனால், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்ந்து போட்டி நிலவியது. இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் 101 இடங்களுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சி 110 இடங்கள் இருந்தால் பா.ஜ.க 109 இடங்கள் என இருந்தது. பிறகு பா.ஜ.க 112 இடங்கள் முன்னேறினால் காங்கிரஸ் 109 இடங்கள் என இருந்தது. இப்படி கடைசிவரை ஒரு இடம் வித்தியாசத்தில் இரு கட்சிகளும் முன்னேறியும் பின் தங்கியும் வந்தன. இதனால் அந்த மாநிலத்தில் மட்டும் தொடர்ந்து 24 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று காலையும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இறுதியாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களும் பா.ஜ.க 109 இடங்களும் பி.எஸ்.பி 2  இடங்களும் மற்றவை 4 இடங்களும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க மொத்தம் 116 இடங்கள் தேவை. தற்போது அங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை. மற்ற கட்சிகளின் ஆதரவைப் பொறுத்தே அங்கு யார் ஆட்சியமைப்பது என்பது முடிவாகும். 

இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தின் கவர்னரை சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுக்க நேரம் கேட்டுள்ளது காங்கிரஸ்.  2003, 2008, 2013 எனத் தொடர்ச்சியாக மூன்று முறை மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.