வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (12/12/2018)

கடைசி தொடர்பு:11:45 (12/12/2018)

கடைசியில் தலைமை அலுவலக கட்டடத்தையே விற்கும் ஏர்இந்தியா!

ஏர் இந்தியா நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கடன் சுமை ரூ.55,000 கோடி ஆகும். ஏர் இந்தியா  நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. வாங்குவதற்கும் பிற நிறுவனங்கள் முன் வரவில்லை. மும்பை நரிமன் பாயின்டில் ஏர் இந்தியா நிறுவனத்துக்குத் தலைமையகம் உள்ளது. இந்தக் கட்டடம் 23 மாடிகள் கொண்டது. நரிமன் பாயின்ட் பகுதி நியூயார்க்கின் மன்ஹட்டனுக்கு இணையாகப் பார்க்கப்படும் மதிப்பு மிகுந்த பகுதி. இந்தியாவின் பல புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் இங்கே அமைந்துள்ளன. நஷ்டத்தைச் சரிக்கட்ட ஏர் இந்தியா தன் தலைமையக கட்டடத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கு மோடி அரசின் ஒப்புதலும் கிடைத்தது. 

ஏர்இந்தியா தலைமை கட்டடம்

ஏர் இந்தியா தன் இணையதளத்தில் விண்ணப்பங்கள் கோருமாறு அறிவித்துள்ளது. அதில், ``ஏர் இந்தியா தலைமையகம் அமைந்துள்ள கட்டடத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 22-வது மாடியில் 5,000 சதுர அடி பரப்பளவில் ஏர் இந்தியா நிறுவனம் செயல்பட அனுமதிக்க வேண்டும். கட்டடத்தின் மேலுள்ள லோகோவை மாற்றாமல் அப்படியே பராமரிக்க வேண்டும். ஏர்இந்தியா என்கிற  கட்டடத்தின் பெயரையும் மாற்றக்கூடாது. 23 மாடிகளில் 17 மாடிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்இந்தியா

கட்டடம் அமைந்துள்ள நிலத்தை மகாராஷ்டிரா அரசிடம் இருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு ஏர்இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது இந்தக் கட்டடத்தில் பேங்க் ஆஃப் இந்தியா, டி.சி.எஸ், இந்திய சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை போன்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு வாடகை வழியாக ரூ.106 கோடி  ஏர்இந்தியாவுக்கு கிடைத்தது. ஒவ்வொரு மாடியில் இருந்து மாதம் 35 லட்சம் வாடகை கிடைத்து வந்தது. தற்போது, ஏர் இந்தியா தலைமை அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டது. கடன் சுமையால் கட்டடம் மற்றும் பிற அலுவலகங்களை விற்று ரூ.9,000 கோடி திரட்ட ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.  தலைமையகத்தை விற்பதன் மூலம் ரூ. 2,000 கோடி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க