ஐந்து மாநில சட்டசபைகள் தேர்தலுக்கு முன் எப்படி இருந்தன? #VikatanInfographics | The past and present scenario of five state assemblies

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (12/12/2018)

கடைசி தொடர்பு:13:32 (13/12/2018)

ஐந்து மாநில சட்டசபைகள் தேர்தலுக்கு முன் எப்படி இருந்தன? #VikatanInfographics

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலின் ஒத்திகையாக இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கும் எனக் கருத்துகள் எழுந்துள்ளன.

ஐந்து மாநில சட்டசபைகள் தேர்தலுக்கு முன் எப்படி இருந்தன? #VikatanInfographics

கோலாகலமாக நடந்து முடிந்து இருக்கின்றன ஐந்து மாநிலத் தேர்தல்கள். வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலின் ஒத்திகையாக இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கும் எனக் கருத்துகள் எழுந்துள்ளன. இந்தத் தேர்தல்களுக்கு முன், 3 மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சி செய்து வந்தது; வடகிழக்கு மாநிலமான மிசோரம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும், தெலங்கானாவில் மாநிலக் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சியிலும் இருந்தன.

இந்தத் தேர்தல் முடிவுகள் தெலங்கானாவைத் தவிர மற்ற மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன. பி.ஜே.பி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய இந்தியாவின் மத்திய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மாநிலக் கட்சிகள் கோலோச்சும் இடங்களில், மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியைத் தழுவியுள்ளது.

சத்தீஸ்கர்:

மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 46 இடங்கள் வென்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழலில், காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வென்றுள்ளது. 15 ஆண்டுகளாகச் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி, வெறும் 15 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மூன்றாவது அணியாக இருந்த சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் கூட்டணி ஏழு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.  

முதல்வருக்கான போட்டியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்ராத்வாத் சாது, மாநில கட்சித்தலைவர் பூபேஷ் பகெல், மூத்த தலைவர் சிங்தியோ ஆகியோர் உள்ளனர். 

சத்தீஸ்கர் தேர்தல் முடிவு

 

மத்திய பிரதேசம்:

ஒரு த்ரில்லர் திரைப்படத்தைப் போல முடிந்திருக்கிறது மத்திய பிரதேச சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. 24 மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங் கட்சியாக உருவெடுத்துள்ளது. 230 இடங்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் 116 இடங்கள் இருந்தால் பெரும்பான்மை பெற முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் இரண்டு இடங்களே தேவைப்படுகின்றன. பி.ஜே.பி-யின் கோட்டையாகக் கருதப்பட்ட மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் 46 தொகுதிகளை இழந்து, 109 தொகுதிகளைப் பெற்றுள்ளது பி.ஜே.பி. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற வேட்பாளர் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளதால், காங்கிரஸ் ஆட்சியமைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அடுத்த முதல்வராகப் பதவியேற்கக் கூடும் எனப் பரவலாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேசம் தேர்தல் முடிவு

 

மிசோரம்:

காங்கிரஸ் கட்சி வசம் இருந்த ஒரே வடகிழக்கு மாநிலத்திலும் தற்போது மாநிலக் கட்சி வென்றுள்ளது. 21 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை என்ற நிலையில், மிசோ தேசிய முன்னணி 26 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வென்றுள்ளனர். தேசியக் கட்சிகளான காங்கிரஸ் 5 இடங்களையும், பி.ஜே.பி. ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. 

மிசோரம் முதல்வராக மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தங்கா பதவியேற்கவுள்ளார்.

மிசோரம் தேர்தல் முடிவுகள்

ராஜஸ்தான்:

இந்த மாநிலத்தில் 2013 தேர்தலில் 21 இடங்களை மட்டுமே வென்றது காங்கிரஸ். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 101 இடங்களைப் பெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழலில், மத்தியப் பிரதேசத்தில் ஆதரவளித்ததுபோல, பகுஜன் சமாஜ் கட்சி ராஜஸ்தானில் வெற்றிபெற்ற 6 வேட்பாளர்களின் ஆதரவை அளிக்குமா என்பது குறித்த கேள்வி நிலவுகிறது. பி.ஜே.பி. 73 இடங்களைப் பெற்றுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி-யைச் சேர்ந்த 19 அமைச்சர்களில் 13 பேர் தோல்வியைத் தழுவினர்.

முதல்வருக்கான போட்டியில், மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இருக்கின்றனர். ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான்

 

தெலங்கானா:

ஆட்சி முடிவதற்கு ஓராண்டு இருந்தபோதும், முன்னரே சட்டசபையைக் கலைத்துத் தேர்தலைச் சந்தித்தது சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி. கடந்த தேர்தலில் 63 இடங்களைப் பெற்றிருந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தற்போது 88 இடங்களில் வென்று, மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களிலும், பி.ஜே.பி ஒரேயோர் இடத்திலும் வென்றுள்ளன. அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி, கடந்த தேர்தலில் பெற்ற ஏழு இடங்களையும் இந்தத் தேர்தலில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தெலங்கானாவின் முதல்வராக சந்திரசேகர் ராவ் மீண்டும் தொடர்வார்.     

தெலங்கானா தேர்தல் முடிவுகள்


டிரெண்டிங் @ விகடன்