வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (13/12/2018)

கடைசி தொடர்பு:16:08 (13/12/2018)

4 வருடத்தில் 12,828 பேர்! - இது சவுதியில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக சவுதி அரேபியா சென்றவர்களில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா

மேல் படிப்பு, சுற்றுலா, வேலை போன்ற பல காரணங்களுக்காக ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அப்படிச் சென்றவர்கள், வளைகுடா நாடுகளில்தான் அதிகம் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி நாடாளுமன்றத்தில், கடந்த இரண்டு நாள்களாகக் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் வி.கே சிங், ‘ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஏமன், கத்தார், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் மட்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றம்

இதில், 12,828 பேர் சவுதி அரேபியாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,877 பேரும் பஹ்ரைனில் 1,021 பேரும், குவைத்தில் 2,564 பேரும், ஏமன் நாட்டில் 1,301 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார். அங்கு இறந்தவர்களில் அதிகமானோர் தற்கொலை மற்றும் சாலை விபத்தினால் மட்டுமே இறந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் தொடர்பாக அந்நாட்டு அரசு பல விழிப்புஉணர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.