தெலங்கானா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற கே.சி.ஆர். பின்னணி...! | K Chandrasekhar Rao sworn in as Telangana chief minister second time

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (13/12/2018)

கடைசி தொடர்பு:18:31 (13/12/2018)

தெலங்கானா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற கே.சி.ஆர். பின்னணி...!

தெலங்கானா முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற கே.சி.ஆர். பின்னணி...!

தெலங்கானா முதல்வராகப் பதவியேற்பதற்கு கே.சி.ஆர். என்றழைக்கப்படும் சந்திரசேகர ராவ், ராஜ யோக முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுத்து இருந்தார். தெலங்கானாவின் போங்கிர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற யதாகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் வேத விற்பன்னர்கள் குறித்துக் கொடுத்த நேரத்தின் அடிப்படையில் பிற்பகல் 1.25 மணிக்கு முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சந்திரசேகர ராவ். 

இந்து மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பர்யச் சடங்குகளில் உறுதியான நம்பிக்கையும், பின்பற்றுதலையும் கொண்டவரான கே.சி.ஆர், இந்த நேரத்தைத் தேர்வு செய்ததற்குக் காரணம், பிற்பகல் 1.25 மணி என்பதுதான் இன்றைய தினத்தின் ராஜயோக முகூர்த்த நேரமாகும். தெலங்கானா மாநிலம் தொடங்கப்பட்டு, இரண்டாவது முறையாக, தொடர்ச்சியாகப் பொறுப்பேற்க அவர் இந்த நேரத்தைத் தேர்வு செய்திருந்தார்.

கே சி ஆர் இரண்டாம் முறையாக முதல்வரானார்

இதுபற்றி யதாகிரி கோயிலின் தலைமை அர்ச்சகரான நரசிம்மாச்சார்யா கூறுகையில், ``பிற்பகல் 1.25 மணிக்கு கே.சந்திர சேகர ராவ், முதல்வராகப் பதவியேற்க மிகச் சிறப்பான நேரமாகும். இந்து மத வழக்கத்தின்படி அந்த நேரத்தில் சஷ்டி இருப்பதால், அடுத்த ஒன்றரை மணி நேரம் ராஜயோக முகூர்த்தமாகும். அதனால் அந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்தேன்" என்றார். 

ராஜயோகம் என்பதால், கே.சி.ஆர். முதல்வராவதற்கு இந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்ததாகவும், இதன்மூலம் எந்தவிதத் தடையும் இல்லாமல் மாநிலத்தில் அவர் ஆட்சி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். தவிர, இந்த முகூர்த்த நேரத்தில் அவரின் அனைத்துக் கிரகங்களும் உச்சத்தில் இருந்ததாகவும், அப்போது பதவியேற்றால், அவர் என்ன செய்தாலும் அவருக்கு நன்மை வந்து சேரும் என்பதாலும், அந்த நேரத்தைப் பரிந்துரைத்திருந்ததாக தலைமை அர்ச்சகர் தெரிவித்தார்.

முன்னதாக, சந்திரசேகர ராவ், புதன்கிழமை அன்றே முதல்வராகப் பதவியேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு வரை முடிவுகள் வெளியானதால், அதன் பின்னர் போதிய நேரமில்லாததால் பதவியேற்புவிழா வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் டி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்றது. காங்கிரஸ் - தெலுங்குதேசம் கூட்டணி 21 இடங்களையும், பி.ஜே.பி. ஓர் இடத்தையும் பிடித்தன. மற்ற கட்சிகள் 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து, தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இரண்டாவது முறையாக நடைபெற்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கே.சி.ஆர். மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

இந்த மாநிலம், ஆந்திர பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு புதிய மாநிலமாக உருவானது. அடுத்தாண்டு மே மாதம் வரை, தெலங்கானா மாநில சட்டசபைக்கு பதவிக்காலம் இருந்த நிலையில், முன் கூட்டியே தேர்தலைச் சந்திக்கத் தயாரானார் கே.சி.ஆர். அவர் எதிர்பார்த்தபடியே, மீண்டும் வெற்றிபெற்று முதல்வராகவும் பதவியேற்றுள்ளார். 64 வயதான சந்திரசேகர ராவுக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

தேர்தல் பிரசாரத்தில் கே.சி.ஆர்

யார் இந்த கே.சந்திரசேகர ராவ்?

ஆந்திர மாநிலத்திலிருந்து தனி மாநிலமாக தெலங்கானாவைப் பிரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்தவர் சந்திரசேகர ராவ். என்றாலும் தெலங்கானா மாநிலம் தனி மாநிலமாக உருவாவதற்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியே காரணம் என்பதைக் கடந்த காலத்தில் கே.சி.ஆரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 

தவிர, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாகவும் அவர் கூறியதுண்டு. ஆனால், நாடாளுமன்றத்தில் தெலங்கானா தனி மாநிலத்திற்கான மசோதா நிறைவேறியதும், ஹைதராபாத் திரும்பிய சந்திரசேகர ராவுக்குத் தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தன் கட்சியை முழுமையான அரசியல் கட்சியாக அறிவித்து, தேர்தலுக்கான செயல் திட்டங்களையும் வெளியிட்டார். 

அடுத்த சில மாதங்களிலேயே நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெற்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராகவும் பொறுப்பேற்றார். தற்போது இரண்டாவது முறையாகவும் முதல்வராகியுள்ளார் அவர். இதன் பின்னணியில் சந்திரசேகர ராவின் அரசியல் ராஜதந்திரமும், மக்களை ஈர்க்கும் வசீகரப் பேச்சுமே உள்ளது என்றால் அது மிகையாகாது.

எந்தவொரு சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு செயல் திட்டத்தை வகுக்கக்கூடியவர். அப்படி வகுத்து விட்டால், அதைச் செயல்படுத்திக் காட்டும் திறமை கே.சி.ஆரிடம் இருக்கிறது. எதிரிகளின் பலத்தை தன் பலமாக மாற்றும் ஆற்றல் படைத்தவர் என்று கே.சி.ஆருக்கு எதிரணியில் இருக்கும் சில தலைவர்களே பாராட்டக்கூடிய அளவுக்குத் திறமை படைத்தவர். 

ஆனாலும், தெலங்கானா மாநிலம் அமைக்கக் கோரி போராட்டத்தை நடத்தியவரே முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தின் தேவைகள் முழு அளவில் நிறைவேற்றப்பட்டனவா என்று கேட்டால், பெரும்பாலானோரின் பதில் இல்லை என்றே வருகிறது. காங்கிரஸ் தலைவர் மதன்மோகனிடம் அரசியல் கற்றுக்கொண்ட கே.சி.ஆர், பின்னர் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டவர். என்.டி.ராமாராவின் புராணப் படங்களை அதிகளவில் விரும்பிப் பார்க்கும் கே.சி.ஆர், 1983-ம் ஆண்டு தெலுங்குதேசம் தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்தார். தன் அரசியல் குருவான மதன் மோகனை எதிர்த்து சித்திபேட்டை தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

கே.சந்திரசேகர ராவ்

1985-ல் முதல் முறையாக ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்தார். 1997-ல் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சரானார். 1999 தேர்தலில் துணை சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு அளிக்க முன்வந்தார். ஆனால், கே.சி.ஆர் விரும்பவில்லை. 

கடந்த 2000-வது ஆண்டில் தெலங்கானா தனி மாநில கோரிக்கையுடன் டி.ஆர்.எஸ். கட்சியைத் தொடங்கிய கே.சி.ஆர், 14 ஆண்டுகள் கழித்து, தனி மாநிலம் உருவாகி, முதல் தேர்தலில் வெற்றிபெற்றதுடன், தற்போது இரண்டாவது முறையும் வெற்றிபெற்று முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளார். 

தெலங்கானாவின் வளர்ச்சியை நோக்கி கே.சி.ஆரின் திட்டங்கள் இருக்கட்டும்... இருக்க வேண்டும் என்பதே அந்த மாநில மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் விருப்பமும் ஆகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்