`ஒரு நபருக்கு ஒரேயொரு தனிநபர் விபத்துக்காப்பீடு போதும்!’ - ஐ.ஆர்.டி.ஏ.ஐ | Change in Accident Insurance Policy!

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (14/12/2018)

கடைசி தொடர்பு:12:38 (14/12/2018)

`ஒரு நபருக்கு ஒரேயொரு தனிநபர் விபத்துக்காப்பீடு போதும்!’ - ஐ.ஆர்.டி.ஏ.ஐ

வரும் ஜனவரி 1, 2019 முதல், ஒருவர் எத்தனை வாகனங்களுக்கு உரிமையாளராக இருந்தாலும் ஒரேயொரு கட்டாய தனிநபர் விபத்துக்காப்பீடு எடுத்தால் போதுமானது.

`ஒரு நபருக்கு ஒரேயொரு தனிநபர் விபத்துக்காப்பீடு போதும்!’ - ஐ.ஆர்.டி.ஏ.ஐ

கட்டாய தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் (compulsory personal accident (CPA)) திட்டத்தில் வரும் ஜனவரி முதல் மாற்றம் வரவுள்ளது. ஒருவர் வாங்கும், ஒவ்வொரு புதிய வாகனத்துக்கும் தனித்தனியாகக் கட்டாய தனிநபர் விபத்துக் காப்பீடு வாங்க வேண்டிய அவசியமில்லை என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ. ரெகுலேட்டரி அமைப்பு, விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. 

விபத்து

தற்போதுள்ள ஐ.ஆர்.டி.ஏ.ஐ. விதிமுறைகளின்படி, ஒருவர் வாங்கும் ஒவ்வொரு வாகனத்துக்கும் தனிநபர் விபத்துக் காப்பீட்டையும் கட்டாயம் வாங்கியாக வேண்டும். வாகனத்தின் உரிமையாளரே ஓட்டுநராகவும் இருக்கும்பட்சத்தில், 15 லட்சம் ரூபாய் காப்பீட்டுத்தொகையுள்ள தனிநபர் விபத்துக் காப்பீட்டுக்கு ஆண்டு பிரீமியமாக 750 ரூபாய் செலுத்தவேண்டுமென்று கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட விதிமுறையில் குறிப்பிட்டிருந்தது. இதன்படி, ஒருவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வாகனத்துக்கும் இந்த இன்ஷூரன்ஸை எடுத்து பிரீமியம் கட்டவேண்டியிருந்தது.

ஒருவருக்கு ஒன்றே போதுமென்ற நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர்க் காப்பீட்டுக்குக் கூடுதல் செலவு செய்யும் நிலை இருந்தது. தற்போது இதைத்தான் ஐ.ஆர்.டி.ஏ.ஐ. மாற்றியமைத்துள்ளது. அதோடு `2019 ஜனவரியிலிருந்து, ஒருவர் எத்தனை வாகனங்களுக்கு உரிமையாளராக இருந்தாலும் ஒரேயொரு கட்டாய தனிநபர் விபத்துக்காப்பீடு எடுத்தால் போதுமானது’ என்ற  அனைத்து விபத்துக்காப்பீட்டு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தனிநபர் விபத்துக் காப்பீட்டுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்திருப்பது குறித்து டூவீலரில் செல்லும் ஒருவரிடம் விசாரித்தபோது, ``எனக்கு ரெண்டு டூவீலர் இருக்குது சார். நான் டூவீலர் வாங்குறப்ப வண்டியோட விலை, தவணை எவ்வளவு கட்டணும்னுதான் விசாரித்தேன். எந்த நிறுவனத்தில் இன்ஷூரன்ஸ் போட்டிருக்காங்கன்னு மட்டும்தான் தெரியும். ஆனால், என்னமாதிரி இன்ஷூரன்ஸ்னு எதுவும் எனக்கு தெரியாது. அதுல என்ன இருக்குதுன்னு கண்டுக்கல. இப்ப கொண்டுவந்திருக்குற மாற்றம் என்னன்னும் தெரியாது" என்றார் கூலாக. 

சுரேஷ்இந்த விதிமுறை மாற்றம் குறித்தும், மக்களிடைய இன்ஷூரன்ஸ் விழிப்புஉணர்வு குறைவாக இருப்பது குறித்தும், வாகன விபத்துக்காப்பீட்டுக்கான சட்ட ஆலோசகர் சுரேஷிடம் கேட்டபோது, ``ஒருவருக்கு ஒரு கட்டாய தனிநபர் காப்பீடு போதுமென்ற ஐ.ஆர்.டி.ஏ.ஐ. அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விதிமுறை மாற்றத்தில் ஒரு கேள்வி எழுகிறது. ஒருவர் ஒரு வாகனத்தை ஒரு ஷோரூமிலும், இன்னொரு வாகனத்தை இன்னொரு ஷோரூமிலும் வாங்கும்பட்சத்தில், அவருக்கு வெவ்வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் வாகன விபத்துக்காப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது. 

பொதுமக்களிடம் விபத்துக்காப்பீடு குறித்த விழிப்புஉணர்வு அதிகம் இல்லாத காரணத்தால், இந்த வேறுபாட்டை பெரும்பாலான வாகன உரிமையாளர்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை. எனவே ஒவ்வொரு வாகனம் வாங்கும்போதும் இந்தக் கூடுதல் காப்பீடும் போடப்பட்டுவிடும். இப்படி வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு எடுத்தாலும் இந்த விதிமுறை செல்லுமா என்பது விளக்கப்பட வேண்டும். அப்படியான சூழலில் விதிமுறை செல்லாது என்றால், வாகனம் வாங்குபவர்கள்தான் விழிப்புஉணர்வோடு காப்பீடு எடுக்க வேண்டும். அந்த விழிப்புஉணர்வை அரசும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, விபத்தில் சிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு மரணம் நேர்ந்தால் மட்டுமே காப்பீட்டை க்ளெய்ம் செய்து பெற முடிகிறது. அல்லது, கை, கால் போன்ற உறுப்புகள் நிரந்தரமாகத் துண்டிக்கப்பட்டால் க்ளெய்ம் செய்ய முடிகிறது. ஆனால் கை, கால் ஒடிந்தாலோ, பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ இந்தக் காப்பீட்டைப் பெறமுடியாத நிலைதான் நடைமுறையில் இருக்கிறது. எனவே, இவற்றுக்கும் க்ளெய்ம் செய்து காப்பீட்டு உதவியைப் பெறும்படி விதிமுறையில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்