``விஜய் மல்லையா திருடர் இல்லை!''- திடீர் பாசம் காட்டும் நிதின் கட்கரி | calling Vijay Mallya a fraud not right: Nitin Gadkari

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (14/12/2018)

கடைசி தொடர்பு:13:00 (14/12/2018)

``விஜய் மல்லையா திருடர் இல்லை!''- திடீர் பாசம் காட்டும் நிதின் கட்கரி

`ஒரு முறை கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் விஜய் மல்லையா `திருடர்' என்று அழைப்பது நியாயமில்லை'' என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். 

மல்லையாவுக்கு கட்கரி ஆதரவு

மும்பையில் `டைம்ஸ் நவ்' நடத்திய பொருளாதாரம் சார்ந்த மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி, ``விஜய் மல்லையா 40 ஆண்டுகளாகக் கடனுக்கான தவணையை முறையாகச் செலுத்தியுள்ளார். விமான நிறுவனத்தைத் தொடங்கிய பிறகே அவரால் கடனைக் கட்ட முடியாமல் போனது. எதிர்பாராத பிரச்னைகள் அவரை இந்தச் சூழலுக்குத் தள்ளியுள்ளது. இதற்காக அவரை `திருடர்' என்று அழைப்பது சரியான மனநிலை கிடையாது. நிரவ் மோடி போலி ஆவணங்களைக் காட்டி வங்கிகளை ஏமாற்றினார். அப்படி ஏதும் போலி ஆவணங்களைக் காட்டி அவர் கடன் பெறவில்லை. வங்கிகளை ஏமாற்றி கடன் வாங்கியிருந்தால், மல்லையாவை சிறையில் அடைப்பது தவறில்லை. பிரச்னையில் சிக்கிய ஒவ்வொரு தொழிலதிபர்களையும் `பித்தலாட்டக்காரர் ' என்றால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றத்தை நோக்கிப் போகாது'' என்று பேசினார். 

விஜய் மல்லையா

முன்னதாக கடந்த 10-ம் தேதி பிரிட்டனின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அப்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி தன் ட்விட்டரில், `இந்தியாவுக்கு இன்று நல்ல நாள், இந்தியாவை யாரும் ஏமாற்றிவிட முடியாது. காங்கிரஸ் அரசால் பயனடைந்தவரை பாரதிய ஜனதா அரசு மீண்டும் தாய்நாட்டுக்கு கொண்டு வரவுள்ளது' என்று பதிவிட்டிருந்தார். 

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா, `விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டது ஊழலுக்கு எதிராகக் கிடைத்த முதல் வெற்றி. பிரதமர் மோடிக்குக் கிடைத்த வெற்றி ' என்று ட்வீட் செய்திருந்தார். 

பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுக்குள்ளேயே விஜய் மல்லையா குறித்து மாறுபட்ட பார்வை இருப்பது அரசியல் விமர்சகர்களை வியப்படைய வைத்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க