முகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா?  | Mukesh Ambani's beautiful love story with Nita

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (14/12/2018)

கடைசி தொடர்பு:14:45 (14/12/2018)

முகேஷ் அம்பானியின் `மௌனராகம்' கார்த்திக் ஸ்டைல் காதல் தெரியுமா? 

`மௌனராகம்' கார்த்திக் போல அடம் பிடித்து நீட்டாவை காதலை ஒப்புக்கொள்ள வைத்தார் முகேஷ்!

டந்த இரு நாள்களாக ஊர் முழுக்க இஷா அம்பானி திருமணம் பற்றித்தான் பேச்சு. ஹிலாரி கிளின்டனில் இருந்து கோலிவுட்டின் ரஜினிகாந்த் வரை முகேஷின் 'அன்டலியா' பங்களாவில் ஆஜரானார்கள். இஷா - ஆனந்த் பிரமால் கல்யாணம் ரூ.100 கோடி செலவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு காதல் திருமணம். மணமகன் ஆனந்த் பிராமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமாலின் மகன். பிரமால் குழுமம் ரூ.25,000 கோடி மதிப்பு கொண்ட நிறுவனம். இதை ரிலையன்ஸ் குழுமத்துடன் ஒப்பிட முடியாது. எனினும், மகளின் காதலுக்கு அம்பானி குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு அழகான காதல் இருக்கிறது.  ஆனந்த் பிரமாலாவது மிகப்பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர். ஆனால், இஷாவின் தாயார் நீடா மிக மிக சாதாரணக் குடும்பத்தில் இருந்து முகேஷின் கரம் பற்றியவர்...  எப்படி? 

முகேஷ் அம்பானி - நிடா

pic: facebook / isha ambani

முகேஷ் அம்பானியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்தான். சாதாரண வீட்டில் பிறந்த நீடா மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர். மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீடாவின் நடனத்தைக் கண்டு பிரமித்துப் போனார் முகேஷின் தந்தை திருபாய் அம்பானி. தன் மூத்த மகனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நீடா குறித்து மனதுக்குள் எண்ணிக்கொண்டார். நீடாவை அழைத்த திருபாய், 'நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா' என்றார். எவ்வளவு பெரிய ஆள், நம்மை அலுவலகத்துக்குக் கூப்பிடுகிறாரே என்று பயந்து போனார் நீடா. எனினும், அடுத்த நாள் திருபாயை அலுவலகத்தில் சென்று சந்தித்தார். முதலில், நீட்டாவின்  பொழுதுபோக்கு, அவருக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட திருபாய் அம்பானி,  நேரடியாக விஷயத்துக்கு வந்தார். 'என் மூத்த மகன் குறித்து உங்களுடன் பேச வேண்டும். அவனை சந்திக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார். 

இஷா அம்பானி திருமணம்

pic: facebook / isha ambani

நீடா பயமறியாத பெண். 'அதிலென்ன இருக்கிறது!' என்று முகேஷை அவரின் வீட்டில் போய் சந்தித்தார். தொடர்ந்து பலமுறை சந்திப்பு நடந்தது. ஒரு முறை நிடாவை காரில் அழைத்துச் சென்ற முகேஷ், மும்பையில் டிராபிக் நிறைந்த சிக்னலில் வண்டியை நிறுத்திவிட்டு, தன் காதலைச் சொன்னார். நீடா எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கவே, பதில் சொன்னால்தான் வண்டியை  எடுப்பேன்  என்று `மௌனராகம்' கார்த்திக் போல அடம் பிடித்தார். நீடா ஒப்புக்கொள்ள, கடந்த 1985-ம் ஆண்டு நீடா இந்தியாவின் பணக்கார வீட்டுக்கு மருமகள் ஆனார்.

பொதுவாக முகேஷ் அம்பானிக்கு பிறந்தநாள் கொண்டாடுவது பிடிக்காது. ஆனால், 50-வது பிறந்தநாளை மனைவிக்காக கொண்டாடினார். அப்போது, நீடா அம்பானிக்கு 62 மில்லியன் யு.எஸ். டாலர்கள் மதிப்பு கொண்ட ஜெட் விமானத்தை பரிசாக அளித்தார்  இந்தத் தம்பதிக்கு இஷா, ஆகாஷ், ஆனந்த் என்ற மூன்று குழந்தைகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க