வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (14/12/2018)

கடைசி தொடர்பு:15:25 (14/12/2018)

பழங்குடியினரின் போராட்டம் பற்றி எழுதிவந்த நிருபர் அமித் கொலை!

பத்தல்கடி என்ற பழங்குடியினரின் போராட்டம் பற்றி பல்வேறு வீடியோ செய்திகளை வெளியில் கொண்டுவந்த செய்தியாளர் அமித் டோப்னோவின் உடல், ஜார்கண்ட் மாநிலம் ஹாஹ்ரா பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமித் டோப்னோவை சில நாள்களாகக் காணவில்லை என்று தேடிவந்த நிலையில், காவல் துறையினர் அடையாளம் தெரியாத சடலத்தை அடையாளம் காட்ட, அவரது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்துள்ளனர்.  வியாழன் (13.11.2018) அன்று அந்த உடல் அமித் டோப்னோவினுடையதுதான் என்று அவர்கள் அடையாளம் காட்டினர்.  அமித் டோப்னோ க்ரவுண்டுஜெரோ என்ற செய்தி நிறுவனத்தில் ஜார்கண்ட் பகுதி சிறப்பு நிருபராகப் பணியாற்றி வந்தவர். 

அமித் டோப்னோ பத்தல்கடி


மத்திய-மாநில அரசுகள், பழங்குடியினரின் உள்ளாட்சி விஷயங்கள் மற்றும் நிலம் தொடர்பான சட்டவிதிகளுக்கு உட்படாமல், ‘தங்கள் நிலமும் தங்களுக்கான சட்டமும் எங்களுக்கே உரிமை’ என்று போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டம், ராஞ்சியின் குந்தி என்ற பகுதியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்தப் போராட்டக்காரர்கள், “மத்திய-மாநில அரசுகள், பழங்குடியின மக்களின் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றன. காட்டு வளங்களுக்கு பழங்குடியினரே உரிமையானவர்கள். இங்கே, வாக்காளர் அடையாள அட்டையோ ஆதார் அட்டையோ எந்த விதத்திலும் பயன்படாத ஒன்று.

அதுமட்டுமல்ல, பழங்குடியினரின் சபைகள்தான் இங்கே அதிகாரம் செய்ய முடியும்” என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை கிட்டத்தட்ட 200 கிராமங்களின் நுழைவாயிலிலும் வைத்தனர். இந்தப் பேனர்கள் இந்திய அரசுக்கு எதிரானது என்றும், இதை கேட்கச் சென்ற காவல்துறை அதிகாரிகளைப் பழங்குடியினர் கொலை செய்துவிட்டார்கள் என்றும், இந்தக் கிராமங்கள்மீது அரசு பாதுகாப்புப் படைமூலம் தாக்குதல் நடத்தியது. இதில், சில கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.  இந்தத் தாக்குதல் குறித்தும்  பழங்குடியினரின் போராட்டம் பற்றியும் எழுதியவர். கொலை செய்திகளை வீடியோக்களாகவும் கட்டுரைகளாகவும் மிக முக்கியத் தகவல்களுடன் வெளியிட்டு வந்தவர், அமித் டாப்னோ.

நிருபர் அமித்

மர்மமான முறையில் அமித் இறந்துகிடந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஹார்ஹா காவல் துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருவதாகக் கூறியுள்ளனர்.