வங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல்! 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது | New Cyclone formed in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (15/12/2018)

கடைசி தொடர்பு:23:39 (15/12/2018)

வங்கங்கடலில் உருவானது ஃபெய்டி புயல்! 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கிறது

வங்கங்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. பெய்டி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் வரும் 17-ம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல்

கஜா புயலின் ரணங்கள் இன்றும் காயாத நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. நேற்று தென் கிழக்கு வங்க கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று உருவெடுத்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக தற்போது மாறியுள்ளது. இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 770 கிலோ.மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வரும் டிசம்பர் 17-ம் தேதி ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினம் - காக்கிநாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு பெய்டி புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

புயல்

இதன் காரணமாக டிச.15, 16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் தரைக்காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். மேலும் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு 15, 16 ஆகிய தேதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த புயலால் புதுச்சேரி யூனியன் பிரசேத்தில் உள்ள ஏனம் என்ற இடமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கோதாவரி, விசாகப்படினம், குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்படும் என  கணிக்கப்பட்டுள்ளது.தெற்கு ஆந்திரா, வட தமிழகம் மற்றும் புதுவையில் நாளை காலை 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசுக்கூடும். அதே போல் மத்திய ஆந்திர கடற்பகுதி மற்றும் புதுவை யானம் பகுதியில் 80ல் இருந்து 90கிலோ மீட்டர் வரையும் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.