ஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா? அப்போ நீங்க தான் லட்சாதிபதி | Vitaminwater contest: Ditch smartphone for a year, win $100,000

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (16/12/2018)

கடைசி தொடர்பு:08:00 (16/12/2018)

ஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா? அப்போ நீங்க தான் லட்சாதிபதி

ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாகத் தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. 

ஸ்மார்ட்போன்

தற்போதைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் மோகம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டது போல நாம் அனைவரும் செல்போன்களை வைத்துத் தான் அனைத்தையும் செய்து வருகிறோம். இது மனநிலையைப் பாதிக்கும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருந்தும் அதை நாம் கண்டுகொள்வதில்லை. இதற்கிடையே, செல்போனுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையிலும், தங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையிலும் தனியார் நிறுவனம் ஒன்று வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. விட்டமின்வாட்டர் என்ற நிறுவனம், ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விட்டமின்வாட்டர் நிறுவனத்திடம், ஏன் ஸ்மார்ட்போனிடமிருந்து உங்களுக்கு இடைவெளி வேண்டும் என்பதை விளக்கும் வகையிலும், ஸ்மார்ட்போன் இல்லாத சமயங்களில் என்ன செய்வீர்கள் என்பது குறித்தும் எழுதி ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் அதனைப் பதிவிட வேண்டும்.

ஸ்மார்ட்போன்

இந்த போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களது பதிலுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக்குகளையும் சேர்த்துப் பதிவிட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளக் கடைசி தேதி ஜனவரி 8, 2019. இதற்குள் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட வேண்டும். 

போட்டியில் கலந்து கொள்வோர் ஒரு வருடத்துக்கு இந்த நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல் போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதுதவிர லேப்டாப், டெஸ்க்டாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்ற சாதனங்களை பயன்படுத்தலாம். எனினும், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. 

விட்டமின்வாட்டர்

விட்டமின்வாட்டர் சார்பில் போட்டியாளர் ஜனவரி 22ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஒரு வருடம் முற்றிலுமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை எனும் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின் பரிசுத் தொகை வெற்றியாளருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையதளவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க