அதிகார வர்க்கம் பெண்களிடம் பாலியல் கோரிக்கை வைப்பது லஞ்சம்: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி சட்டம்! | Jammu-Kashmir becomes first state to ban 'sextortion'

வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (16/12/2018)

கடைசி தொடர்பு:14:08 (16/12/2018)

அதிகார வர்க்கம் பெண்களிடம் பாலியல் கோரிக்கை வைப்பது லஞ்சம்: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி சட்டம்!

”அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களிடம் பாலியல் ரீதியாக அணுகுவது, அதிகாரத்தை அப்பட்டமாகத்  தவறான முறையில் பயன்படுத்துவதேயாகும்”, என்று இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அதிகார வர்க்கம் பெண்களிடம் பாலியல் கோரிக்கை வைப்பது லஞ்சம்: ஜம்மு-காஷ்மீரில் அதிரடி சட்டம்!

ந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், வன்முறைகள் எதிராக அரசும், தன்னார்வலர் அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். இதில், பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது . ‘sextortion' எனப்படும் ‘அதிகார வர்க்கத்திலிருந்து பாலியல் ரீதியாகப்  பெண்களிடம் நடத்தப்படும் சுரண்டலுக்கு தடை விதித்திருக்கிறது .  இத்தகைய சட்டத்தை முதன்முறையாக அமல்படுத்தியது இம்மாநிலம்தான் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர்  சத்ய  பால் மாலிக் கண்காணிப்பில் இயங்கும் மாநில நிர்வாக கவுன்சில், லஞ்ச ஒழிப்பு மசோதா  2018 மற்றும்  ஜம்மு -காஷ்மீர் குற்றவியல் சட்டத்  திருத்த மசோதா  2018  ஆகிய இரண்டுக்கும் ஒப்புதல் அளித்து அமல்படுத்தியுள்ளது.

பாலியல் கோரிக்கை

இந்தச் சட்டத்திருத்தங்கள் , கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த உத்தரவை அளித்த தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி அலோக் அராதே, அதிகார வர்க்கம் பெண்களிடையே நடத்தும் பாலியல் சுரண்டல்களுக்குத்  தடை விதிக்கும் புது சட்டம் அல்லது ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரவும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது . 

பெண்களை, பாலியல் ரீதியில் அதிகார வர்க்கம் வலுக்கட்டாயமாக அழைக்கப்படுவது என்பது பறித்தலுக்கு  (extortion) உட்பட்டது. இது ஒருவகையான லஞ்சமும்கூட . லஞ்சம் என்பது ஒருவரிடம் பணத்தை பறிப்பது; அதுவே  பணத்திற்குப்  பதிலாக பெண்களிடம் பாலியல் ரீதியான எதிர்பார்ப்பை  வைப்பது ‘sextortion’ என்று சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.  இந்த விளக்கத்தைக்  கூறி ,  இந்தச் சட்டத்தைப் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . 

பாலியல் கோரிக்கை

இத்தகைய சூழ்நிலையைக் கையாள, 2006 -ம் ஆண்டு இயற்றப்பட்ட லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் இடமில்லாமல் இருந்ததையும் , அத்தகைய புது சட்டத்தைக்  கொண்டுவரவேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டிருந்தது. ”அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களிடம் பாலியல் ரீதியாக அணுகுவது, அதிகாரத்தை அப்பட்டமாகத்  தவறான முறையில் பயன்படுத்துவதேயாகும்” என்றும் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது . இத்தகைய குற்றங்கள், ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டமீறலாகக் கருதப்படும்  என்றும் சட்டத்திருத்தத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது . 

மேலும் , இதில் புதிதாக   354 E 'தி ரன்பீர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு' ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது . இதில் , ‘sextortion’ என்பதற்கு , அதிகாரத்தில் உள்ளவர்களிடமிருந்து தொல்லை, தகாத பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுவது, அரசு ஊழியர்கள், பெண்களிடம் சில வேலைகளைச்  செய்துமுடிப்பதற்கு பதிலாக பாலியல் ரீதியான கோரிக்கைகள் வைப்பது என்று அர்த்தம் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . இது கணினி, போன் போன்ற எந்த வகையான மின் சாதனங்கள் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டாலும் குற்றமே ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ், குற்றம் சாட்டப்பட்டவர், மூன்று ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் .

பெண்கள்

பெரும்பாலும் , வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்குமே செய்திகளில் அதிகம் அறியப்படும் ஜம்மு -காஷ்மீர் மாநிலம், பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இத்தகைய சட்டத்தை அமலப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், அரசியல் அதிகார வர்க்கத்தின் ஆணவத்தால், இதே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா சிறுமியின் வழக்கு நீதி கிடைத்தபாடில்லை என்பது  வேதனையான உண்மை.

இத்தகைய சட்டத்திருத்தங்களை  பிற மாநிலங்களும் பரிசீலிக்க வேண்டியது அவசியமான ஒன்று . பரிசீலிக்குமா மாநில அரசுகள்?
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்