வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (17/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (17/12/2018)

டிசம்பர் 31-க்குள் சரணடையுங்கள்!' - முன்னாள் அமைச்சருக்குத் தண்டனை உறுதி

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் முன்னாள் அமைச்சர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

சஜ்ஜன் குமார்

கடந்த 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் 5 சீக்கியர்களைக் கொன்றதாக முன்னாள் அமைச்சர் சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சஜ்ஜன் குமாரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது. அதேநேரம் முன்னாள் கவுன்சிலர் பல்வான் கோக்கர், கிரிதரி லால் மற்றும் கேப்டன் பக்மல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மேலும், 2 குற்றவாளிகளான முன்னாள் எம்.எல்.ஏ மகேந்தர் யாதவ், கிஷன் கோக்கர் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.  

சஜ்ஜன் குமார்

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இந்த வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் என்றும், 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், கோஹர் உள்ளிட்டோருக்கு விதித்த தண்டனையையும் டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க