மேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் 13 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். தற்போது வரை அவர்களின் ஹெல்மெட்டுகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.
Photo : Twitter/@vickrambodke
மேகாலயாவில் பல நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவற்றில் தகுந்த அனுமதி இல்லாமல் பல சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வருகின்றன. அப்படி ஜைன்டியா மாவட்டத்தின் சான் என்ற கிராமத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதுவும் சட்டவிரோதமாக செயல்படும் ஒரு சுரங்கம்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. சுமார் 370 அடி ஆழம் உள்ள அந்தச் சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் உள்ளது. சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்த உடனேயே அங்கிருந்த ஐந்து தொழிலாளர்கள் வெளியில் சென்றுவிட்டனர். ஆனால், 13 பேர் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர்.
தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததும் கடந்த இரண்டு நாள்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். ஒரு புறம் சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றும் பணிகளும் மறுபுறம் சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு மூன்று தொழிலாளர்களில் ஹெல்மெட் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக சுரங்கம் நடத்தியதாக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி பேசிய ஜைன்டியா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ` சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. மேலும், அதிநவீன இயந்திரங்களுடன் தேசிய மீட்புப் படையினரும் வந்துள்ளனர். இரண்டு நாள்களாகத் தேடியும் எங்களால் ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீரின் மட்டத்துக்குக் கீழே சுரங்கத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் நீரை வெளியேற்றுவது மிகவும் கடினமான காரியமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
#Meghalaya: Rescue operations to save 13 miners trapped in coal mine near Lyteiñ River in East Jaintia Hills district is still on.#AIRVideo: Samir pic.twitter.com/xfYLxjvaoh
— All India Radio News (@airnewsalerts) December 16, 2018
