சாதி குறித்து அவதூறு பேச்சு! - மலையாள எழுத்தாளர் சந்தோஷ் யெச்சிகாணம் கைது | Writer Santhosh Echikkanam arrested for making casteist remarks

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (17/12/2018)

கடைசி தொடர்பு:16:07 (17/12/2018)

சாதி குறித்து அவதூறு பேச்சு! - மலையாள எழுத்தாளர் சந்தோஷ் யெச்சிகாணம் கைது

சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல மலையாள எழுத்தாளர் சந்தோஷ் யெச்சிகாணம் சனிக்கிழமை ஹோஸ்துர்க் பகுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாகக் கூறி சம்மக்கோச்சி பாலகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மலையாள எழுத்தாளர் சந்தோஷ் யெச்சிகாணம்

2017 பிப்ரவரி மாதத்தில் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் பாலகிருஷ்ணனின் ‘பந்திபோஷணம்’ என்ற சிறுகதை தொடர்பாக விவாத நிகழ்ச்சி ஒன்றை கோட்டயத்தில் இயங்கும் பதிப்பகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விவாதத்தில் கலந்துகொண்ட சந்தோஷ் ``சில தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பணமும் புகழும் சேர்ந்த பிற மேட்டுக்குடியினர்போல நடந்துகொள்கின்றனர். இதற்கு நல்ல உதாரணம் `மாவிளன்’ சமூகத்தைச் சேர்ந்த என்னுடைய நண்பர்தான்” என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளிலும் யூடியூபிலும் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த பாலகிருஷ்ணன், சந்தோஷ் மீது `சாதிய ரீதியில் அவதூறு பேசியுள்ளார்’ என்று புகார் அளித்தார். பாலகிருஷ்ணன் மாவிளன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதைத் தொடர்ந்து சந்தோஷ் மீது தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுக்கும் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், கேரள உயர்நீதிமன்றம் சனிக்கிழமை அந்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, உடனடியாக ஹோஸ்துர்க் காவல்நிலையத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதன்பின் இந்த வழக்கை விசாரிக்கும் துணை ஆணையர் ப்ரதீப் குமார் முன்னிலையில் சனிக்கிழமை நேரில் ஆஜரானார் சந்தோஷ். ஆஜரான சிறிது நேரத்திலேயே ஜாமீன் பெற்று வெளியே வந்தவர், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.