வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (17/12/2018)

கடைசி தொடர்பு:18:05 (17/12/2018)

1,500 ரூபாய் உதவித்தொகை... கல்லூரி பயிலும்போதே வேலைவாய்ப்பு பயிற்சி... மோடியின் மெகா திட்டம்!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேலை இல்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உருவெடுக்கலாம் என்பதால், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும்

ட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயிலும் இளைஞர்கள், படித்து முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், மாதம் 1,500 ரூபாய் உதவித் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் இணைந்து செயல்படுத்த உள்ளன. 

 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வி, அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2019 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முனைப்புடன் உள்ளதோடு, பா.ஜனதாவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்கவும் தீவிரமாக உள்ளன. 

அச்சத்தை ஏற்படுத்திய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்

இந்த நிலையில், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் மக்களின் மன நிலையை நன்கு உணர்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. அதே சமயம் சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் தமது அரசுக்கு எதிரான மன நிலையையே பிரதமர் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாமான்ய மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் புரட்டிப் போட்டது என்றால், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை சிறு தொழில் துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த இரு பிரச்னைகளும் சேர்ந்து ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்பின்மை பிரச்னையை மேலும் மோசமாக்கியது.

இன்னொருபுறம் விவசாயிகள், கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இவையெல்லாம் மத்திய அரசைப் பெரிதும் அசைத்துப் பார்க்காத நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் பிரச்னையின் தீவிரத்தை அது உணர்ந்துள்ளது.

இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்குத் தலைவலியாக இருக்கக்கூடிய பிரச்னைகளைப் பட்டியலிட்டு வருகிறது மத்திய அரசு. அதில், முதலில் இடம்பெற்றுள்ளது விவசாயக் கடன் தள்ளுபடி. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி

வேலைவாய்ப்பை உருவாக்கும் மெகா திட்டம்

அதற்கு அடுத்தபடியாக வேலை இல்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உருவெடுக்கலாம் என்பதால், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளிக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகிய 3 அமைச்சகங்களும் இணைந்து செயல்பட உள்ளன. 

இது தொடர்பாக, மேற்கூறிய 3 அமைச்சகங்களின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் இணைந்து, கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர். அதில், இத்திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு, செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின்படி,  தனியார் மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கக்கூடிய மாபெரும் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. தொழில்நுட்ப பயிற்சி மட்டும் அல்லாது தொழில்நுட்பம் அல்லாத வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. 

பட்டப்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு 6 முதல் 10 மாத காலம் வரை இந்தத் தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித் தொகையும் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், ஒரு மாணவர் பட்டப்படிப்பு முடித்து வெளியே வரும்போது அவர் ஏதாவது ஒரு வேலையைச் செய்யக்கூடிய அல்லது வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய திறனுடன் இருப்பார். 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம் மூலம், 2019-20-ம் கல்வியாண்டில் சுமார் 10 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் தொழில் பயிற்சி

இந்த வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தில் மத்திய பொதுத் துறை நிறுவனங்கள்,  திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் இணைந்து, பட்டப்படிப்பு படித்து வெளியேறும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர்தரமான பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாகச் செயல்படும். 

தொழில் பயிற்சி

நம் நாட்டில், தொழில்நுட்ப படிப்புகளைப் படிப்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அதே சமயம் தொழில்நுட்ப படிப்பு  அல்லாத இதர பட்டப்படிப்பு, அதாவது கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்தான் வேலைவாய்ப்பின்மை பிரச்னையை அதிகம் எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இளநிலை பட்டப்படிப்பை முடிப்பவர்களில், முதுநிலை பட்டப்படிப்புக்குச் செல்வோர் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், இந்தப் பிரிவினருக்குத்தான்  வேலை வாய்ப்புக்கான பயிற்சி மிகவும் அதிகம் தேவையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே, அவர்கள் படித்து முடித்து வெளியே வரும்போது,  ஒரு வேலை கிடைக்கும் அளவுக்கு அவர்களைத் தயார்படுத்தும் நோக்கத்தில் பயிற்சி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

2019-20-ம் கல்வியாண்டில் சுமார் 80 லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியே வர உள்ள நிலையில், அவர்களில் குறைந்தது 10 லட்சம் பேருக்காவது இந்த வேலை வாய்ப்புப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

மத்திய அரசின் தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பெரும்பாலான நிதி பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. எனவே, முடங்கிக் கிடக்கும் அந்த நிதியைக் கஜானாவிலிருந்து எடுத்து, இத்திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட  திட்டமிடப்பட்டுள்ளது. 

இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களைத் தொழில் பயிற்சிக்குச் சேர்த்து, அவர்களை உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைத்தல், இளநிலை தொழில் படிப்புகளைத் தொழில் பயிற்சித் திட்டங்களுடன் இணைத்தல் மற்றும், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் தேசிய வேலை வாய்ப்பு இணையதளங்களுடன் இணைத்தல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் வகையில் இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அமல்படுத்தப்பட்டிருந்தால் கூட, கடந்த 4 ஆண்டுகளில் எத்தனையோ லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்று, குறைந்தபட்சம் அவர்களது வாக்குகளாவது வரவிருக்கும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கலாம். தற்போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் அமல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டம், மோடிக்குத் தேர்தலில் எந்த அளவுக்குக் கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. 

ஆனாலும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தால் நல்லதுதான் என்பதால், இதை நிச்சயம் வரவேற்கலாம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்