பொதுத்துறை வங்கிகளில் காத்திருக்கும் 1 லட்சம் வேலை!  | SBI, Bank of Baroda, Canara Bank to hire 1 lakh people this fiscal to push new-age banking: report

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (17/12/2018)

கடைசி தொடர்பு:19:20 (17/12/2018)

பொதுத்துறை வங்கிகளில் காத்திருக்கும் 1 லட்சம் வேலை! 

தனியார் வங்கிகளில் பணியாற்றும் தலைமை விற்பனை அதிகாரி, தலைமை முதலீட்டு அதிகாரி உள்ளிட்டவர்களை, ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியில் அமர்த்திக்கொள்ளவும் பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

ஸ்.பி.ஐ, கனரா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 3 பொதுத்துறை வங்கிகளும், நடப்பு 2018-19-ம் நிதியாண்டில் சுமார் 1 லட்சம் பேரை பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வங்கி

வங்கிப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதையும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் சேவைகளில் பின்பற்றும் நடைமுறைகளை இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப பின்பற்றுவதையும் முடுக்கிவிடும் நடவடிக்கைகளை இம்மூன்று வங்கிகளும் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஒருபக்கம் கைகொடுத்தாலும், அதைச் செயல்படுத்துவதற்கு மனித வள ஆற்றலும் அவசியமாக உள்ளது. அதாவது, பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தேவைப்படுகிறது. 

அதிலும், ரிசர்வ் வங்கியின் கிடுக்குப்பிடி நடவடிக்கை காரணமாக சமீபகாலமாகப் பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமையிலிருந்து பெருமளவு மீண்டு வந்ததைத் தொடர்ந்து, அவற்றுக்கு இடையே தொழில் போட்டிகள் அதிகரித்துவிட்டன. இதனால், புதிய புதிய யுக்திகளுடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி போட்டி வங்கிகளைப் பின்னுக்குத் தள்ளுவதில் இவை தீவிரமாக உள்ளன. 

இதைக் கருத்தில்கொண்டு வரும்காலத்தில் சொத்து மேலாண்மை, அனலிட்டிக்ஸ், தொழில் யுக்தியாளர், டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் போன்றவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்களை அமர்த்த இந்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. கூடவே கிளர்க் பதவிகளுக்கும் ஆட்கள் தேவையாக உள்ளது. இவ்வாறு இந்த மூன்று வங்கிகளும், நடப்பு நிதியாண்டில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களைப் பணியில் அமர்த்த உள்ளன. 

பொதுத்துறை வங்கிகளில், தற்போது எஸ்.பி.ஐ வங்கியைத் தவிர்த்து இதர வங்கிகளின் மொத்த பணியாளர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் கிளார்க் பதவியில் இருப்பவர்கள்தான். அதே சமயம், எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் அதன் மொத்த பணியாளர்களில் 45 சதவிகிதம் பேர் கிளார்க் பதவியில் இருப்பவர்கள். 

மாறும் வேலை கலாசாரம்

இந்த நிலையில், இத்தகைய வேலை கலாசாரத்தை மாற்றி, தற்போதைய டிஜிட்டல் யுகத்துக்குத் தேவையான தகுதிகளுடன்கூடிய பணியாளர்களை அமர்த்த எஸ்.பி.ஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக, தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஈடானவர்களை வேலைக்கு எடுக்க, எஸ்பிஐ மட்டுமல்லாது கனரா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளும் திட்டமிட்டுள்ளன. 

மேலும், தனியார் வங்கிகளில் மாத இலக்குகளுடன் செயல்படும் தலைமை விற்பனை அதிகாரி, தலைமை முதலீட்டு அதிகாரி, தலைமை கற்றல் அதிகாரி, அனலிட்டிக்ஸ் தலைவர் மற்றும் தலைமை மார்க்கெட்டிங் பரப்புரையாளர்களை, ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் என்ற அளவுக்கு அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்து பணியில் அமர்த்திக்கொள்ளவும் இந்த வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க