ம.பி-யில் ரூ.56,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி! - பதவியேற்ற 2 மணிநேரத்தில் அசத்திய முதல்வர் | Madhya Pradesh CM waived off the loans for farmers

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (17/12/2018)

கடைசி தொடர்பு:16:34 (18/12/2018)

ம.பி-யில் ரூ.56,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி! - பதவியேற்ற 2 மணிநேரத்தில் அசத்திய முதல்வர்

மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக காங்கிரஸை சேர்ந்த கமல் நாத் இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் தன் முதல் கையெழுத்தாக விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

மத்தியப்பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட கமல்நாத்

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்த மூன்று மாநிலத்திலும் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என பெரும் போட்டி நிலவியது. இறுதியில் அந்தப் பொறுப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. அவர்  ‘சக்தி’ என்ற செல்போன் செயலி மூலம் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்ட பின்னர் மூன்று மாநில முதல்வர்களையும் அறிவித்தார்.

கமல்நாத் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்

அதில் மத்தியப் பிரதேச முதல்வராக கமல் நாத்தையும், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெஹ்லாட்டையும், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாஹலும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முதல்வர்கள் இன்று பதவியேற்றனர். அசோக் கெஹ்லாட் காலை 10 மணிக்கும், கமல் நாத் பிற்பகல் 2 மணிக்கும் பதவியேற்றனர். இந்த விழாவில் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க தலைவர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி  உட்பட பலர் கலந்துகொண்டனர். 

விவசாயக் கடன் தள்ளுபடி கோப்பில் கையெழுத்திடும் கமல்நாத்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதன்முதலாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பிரசாரத்தின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், தான் பதவியேற்ற அடுத்த 2 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான தனது முதல் கையெழுத்தையிட்டார். தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் பெற்ற ரூபாய் இரண்டு லட்சம் கடன் வரை தள்ளுபடி செய்து அறிவித்தார். மொத்தமாக அந்த மாநிலத்தில் சுமார் 56,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மத்தியப்பிரதேச முதலமைச்சர் கமல்நாத்

இது பற்றி அவர் பேசும்போது, `` எங்களுக்குக் கொள்கை மற்றும் விதிகளில் மாற்றம் தேவையில்லை. ஆனால், நடைமுறையில் கண்டிப்பாக மாற்றம் கொண்டுவரப்படும். இளைஞர்களுக்குத் தேவையான அனைத்துவித நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிச்சயம் நிறைவேற்றும்” எனப் பேசினார். 

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `` மத்தியப் பிரதேச முதல்வர் விவசாயக் கடன் தள்ளுபடி செய்துள்ளார். (வாக்குறுதிகளில்) ஒன்று முடிந்தது. மீதமுள்ள இரண்டும் விரைவில்” என குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேச முதல்வரின் இந்தச் செயல் அம்மாநில விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.