வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (18/12/2018)

கடைசி தொடர்பு:08:43 (18/12/2018)

`கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும்' - ஸ்டாலின் பேச்சுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு?

ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலின்

கருணாநிதி சிலை திறப்பு விழா சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதாகத் தெரிவித்தார். மேலும், ``நாட்டின் பிரதமர் வேட்பாளராகத் தமிழகத்திலிருந்து ராகுல் காந்தியின் பெயரை நான் முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக... நாட்டுக்கு நல்லாட்சி தருக.. பாசிச, நாசிச மோடி ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்கு இருக்கிறது. ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துவோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து வலுப்படுத்துவோம். நாட்டைக் காப்பாற்றுவோம் என்று உங்களோடு சேர்ந்து நானும் உறுதிமொழி எடுக்கிறேன்’’ என்று பேசினார்.

ராகுல் காந்தி

இவரின் பேச்சு கூட்டணியின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் பேசிய அன்றே,  ``பிரதமர் வேட்பாளர் குறித்து கூட்டணியில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா. இதேபோல், ``தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே பிரதமர் வேட்பாளரை முன்மொழிவது வழக்கம். மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறும்போது பிரதமர் வேட்பாளர் பற்றி பரிசீலிக்கும் சூழல் வரும்" என்று கூறினார் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஸ்டாலினின் பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

மம்தா பானர்ஜி

இந்நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரும்பவில்லை என ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ``திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல மற்ற எதிர்க்கட்சிகளும் பிரதமர் வேடர்பாளர் குறித்துத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முடிவெடுப்பதை விரும்புவார்கள். பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த அறிவிப்பும் முன்கூட்டியே இருக்குமானால், அது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். பிறகு இந்தக் கூட்டணி அற்ப ஆயுள் உள்ள கூட்டணியாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். இது தற்போது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க