`கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து' - கர்நாடக அரசு `திடுக்' தகவல்! | Karnataka government revealed ‘dangerous substance’ were found in prasad

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (18/12/2018)

கடைசி தொடர்பு:10:10 (18/12/2018)

`கோயில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து' - கர்நாடக அரசு `திடுக்' தகவல்!

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் அருகே சுல்லிவாடி என்ற கிராமத்தில் உள்ள கிச்சுக்குத்தி மாரம்மா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோயிலில் கோபுரம் கட்டும் பணி நிறைவடைந்திருந்த நிலையில், மேலே கலசம் அமைக்கும் பணிக்காக அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூடியிருந்தனர். இதையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கர்நாடகா

பூஜைகள் முடிந்தவுடன் அன்னதானத்தைச் சாப்பிட்ட மக்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். பிறகு அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர்கள் உண்ட உணவில் விஷம் கலந்திருப்பதாக கூறப்பட்டது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலைப் பராமரிப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலினால் எதிர் தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பதாக முன்னதாக கூறப்பட்டது. இதையடுத்து, சாம்ராஜ் நகர் போலீஸ் எஸ்.பி.தர்மேந்திர குமார் மீனா சுல்லிவாடி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் பரமேஷ்வரா இது பற்றி ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, `` கோயில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தின் சிறிய பகுதி தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் பிரசாதத்தில் மோனோக்ரோடோபோஸ் (monocrotophos) மற்றும் ஆர்கனோபாஸ்பேட் (organophosphate) என்ற இரு ரசாயனப் பொருள்கள் கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பொருள்கள் பொதுவாக விளைநிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருத்தில் கலப்பது. இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது” எனப் பேசியுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்துள்ளதாகவும் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் கோயில் பிரசாதத்தில் ஏன் பூச்சி மருந்து கலக்கப்பட்டது என்ற உண்மை கண்டுபிடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.