வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (18/12/2018)

கடைசி தொடர்பு:11:10 (18/12/2018)

போலீஸுடன் கடும் வாக்குவாதம்! சபரிமலை கோயிலுக்குள் சென்ற திருநங்கைகள்!

திருநங்கைகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சபரிமலை

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒவ்வொரு முறை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்போதும் பல பிரச்னைகள், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. ஐப்பசி பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டபோது  பெண் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் சபரிமலைக்குள் நுழைய முயன்றனர். இதை எதிர்த்து, சந்நிதான வாயிலில் பக்தர்கள் பலர் போராட்டம் நடத்தினர். பின்னர் நிலக்கல், பம்பை மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த போராட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, தற்போது கார்த்திகை மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடந்த சர்ச்சையினால் சபரிமலையில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்கள் மற்றும் பதற்றங்கள் காரணமாக அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோட்டையம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த நான்கு திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவுடன் சபரிமலை செல்வதற்காக வந்துள்ளனர். அவர்களைக் கண்ட போலீஸார் மேலும் முன்னேற முடியாமல் தடுத்து விசாரணை நடத்தினர். அப்போது திருநங்கைகளை கோயிலுக்குள் அனுமதிப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும், போராட்டங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறினர். மேலும், அவர்களைப் புடவை அணிந்தபடி செல்லக்கூடாது என்றும் ஆண்கள் உடையுடன்தான் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

போலீஸ் பாதுகாப்புடன் திருநங்கைகள்

Photo : @Mathrubhumi

கோயிலுக்குள் செல்ல தங்களிடம் அனுமதி உள்ளதாக அந்த திருநங்கைகள் கூறியும் போலீஸார் அவர்களைத் தடுத்தனர். இதையடுத்து அனன்யா, அவந்திகா, ரஞ்சுமோல், திருப்தி ஆகிய நான்கு திருநங்கைகளும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்த பெண் போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரிகளிடம் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.  ``நாங்கள் புடவையுடன்தான் கோயிலுக்குள் செல்லப் போகிறோம். எங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்” என திருநங்கை அனன்யா கூறியுள்ளார்.