வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (18/12/2018)

``எங்கள் பணி தொடங்கிவிட்டது; மோடியைத் தூங்கவிடப்போவதில்லை’’ - சூளுரைத்த ராகுல் காந்தி

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் குஷியில் உள்ளனர். இதையடுத்து நேற்று மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற பிறகு தங்களின் முதல் கையெழுத்தாக விவசாயக் கடனை தள்ளுபடி செய்தனர். இது நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

காங்கிரஸ்

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த மூன்று மாநிலங்களில் இரண்டு மாநிலத்தில் முதல்வர்கள் பதவியேற்ற அடுத்த ஆறு மணி நேரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாகவுள்ள ராஜஸ்தானிலும் இந்த நடவடிக்கை தொடரும். 

ராகுல் காந்தி

மத்திய அரசு விவசாயக் கடனை தானாகத் தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியைத் தூங்கவோ ஓய்வெடுக்கவோ அமைதியாக அமரவோ விடப்போவதில்லை. எங்களுடைய பணி தொடங்கிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அனைத்து மாநிலத்திலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் உலகின் மிகப்பெரிய ஊழல். அந்த நடவடிக்கை ஏழைகளின் பணத்தை எடுத்து பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கியது” எனச் சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.