வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (18/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (18/12/2018)

``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்!’’ - பிரதமர் மோடி

99 சதவிகித பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை, 18 சதவிகித வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு

மும்பையில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ``பல ஆண்டுகளாகவே நாட்டுக்கு இந்த வரி முறை தேவையாக இருந்தது. அதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்த இருந்த முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.  

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதற்கு முன்னர் 65 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்திருந்தன. ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கையில் 55 லட்சம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருள்கள் உள்ளிட்ட, 99 சதவிகித பொருள்களை 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

28 சதவிகித வரி வரம்புக்குள் இருக்கும் பொருள்களில் பெரும்பாலானவற்றை 18 சதவிகித வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும். இனிமேல், குறிப்பிட்ட சில பொருள்கள் மட்டுமே, அதாவது ஆடம்பர பொருள்கள் மட்டுமே 28 சதவிகித வரம்புக்குள் வரும். 

வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமுகமான முறையாக ஜி.எஸ்.டி முறையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. வளர்ந்த நாடுகளில் ஒரு சிறிய வரி சீர்திருத்தத்தைக்கூட அத்தனை சுலபமாக அமல்படுத்திவிட முடியாது" என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் ஊழலை அடியோடு ஒழிக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

``இந்தியாவில் ஊழல் என்பது புதிய இயல்பாக மாறிவிட்டது. யாராவது ஒருவர் இன்னொருவரிடம் பேசும்போது, `இதுதான் இந்தியா... இப்படித்தான் இருக்கும்!' என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. ஏன் அப்படி இருக்க வேண்டும்? 

நிறுவனங்கள், தாங்கள் வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்தாமல் இருக்கும்போது அந்த நிறுவனங்களுக்கோ அல்லது அதன் உரிமையாளர்களுக்கோ எதுவும் பாதகமாக நடப்பதில்லை. ஏனெனில், குறிப்பிட்ட சிலரால், விசாரணையிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். 

நாட்டில் அனைத்து இல்லங்களுக்கும் சமையல் எரி வாயு இணைப்புகள் கொடுக்க எனது அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2014-ம் ஆண்டு வரை நாட்டில் 55 சதவிகிதம் பேருக்கு மட்டுமே எரி வாயு  இணைப்புக் கிடைத்தது. நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய இதுபோன்ற நடைமுறைகளுக்கு முடிவுகட்டி, நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை நோக்கி எனது அரசு சென்றுகொண்டிருக்கிறது" என மோடி மேலும் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க