வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (19/12/2018)

கடைசி தொடர்பு:09:10 (19/12/2018)

காங்கிரஸின் விவசாயக் கடன் தள்ளுபடி எதிரொலி! - 2 மாநிலங்களில் சலுகைகளை வாரி இறைத்த பா.ஜ.க

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது `காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த மாநிலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் மற்றும் இளைஞர்களுக்கு 100 சதவிகிதம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்திருந்தார். தேர்தலுக்குப் பின்னர் ஐந்து மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. 

காங்கிரஸ்

இதையடுத்து முன்னதாக அறிவித்ததைப் போல் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்ற மூன்று மாநிலங்களில், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜஸ்தானிலும் விரைவில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

பாஜக

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் மேற்கொண்ட இந்த நடவடிக்கையினால் பா.ஜ.க ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களிலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் அஸ்ஸாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் விவசாயக் கடன் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தை முற்றிலும் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது அந்தந்த மாநில பா.ஜ.க அரசு. 

விவசாயிகள் கடன் தள்ளுபடி

``இதனால் முறையே 600 கோடி ரூபாய் மற்றும் 650 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்கள் இரு மாநிலங்களிலும் தள்ளுபடி செய்யப்படவுள்ளது. மேலும், மின்சாரக் கட்டணம் தள்ளுபடியின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 6 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்” என குஜராத் மாநில அமைச்சர் சௌரப் படேல் (Saurabh Patel) தெரிவித்துள்ளார். 

பாஜக

மேலும், இது பற்றி பேசிய அஸ்ஸாம் அமைச்சர் பரிமல் சுக்லபாய்யா, ``கடந்த திங்கள் கிழமை இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடியின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வருங்காலத்தில் விவசாயக் கடனில் ரூ.25,000 வரை தள்ளுபடி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிஷான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயக் கடன் செலுத்திவருபவர்களுக்கு 4% வட்டி குறைக்கப்படும். கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது அது முடிந்தவுடன் இந்த நடவடிக்கை அமல் படுத்தப்படும்” 

‘ராகுல் காந்தி விவசாயக் கடன் தள்ளுபடி செய்த பிறகுதான் மற்ற மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ ‘இவ்வளவு நாள் கழித்து நீங்கள் விழித்துக்கொண்டது எப்படி?’ என காங்கிரஸ் கட்சியினர் அந்தந்த மாநில அரசுகளைக் கேள்வி எழுப்பியுள்ளனர்.