வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (19/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (19/12/2018)

அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை 200 சதவிகிதம் உயர்த்திய கர்நாடகா!

அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட்டணத்தை 200 சதவிகிதமும், மருத்துவ மேற்படிப்புக்கான கட்டணத்தை 500 சதவிகிதமும் உயர்த்தியுள்ளது கர்நாடகா அரசு. 

கர்நாடகா மருத்துவக் கல்லூரி

``கர்நாடகா அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க, ஆண்டுக்குக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.17,000-யும், மருத்துவ மேற்படிப்புக்குக் கட்டணமாக ரூ.50,000-மும் பெறப்படுகிறது. அடுத்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கட்டணம் 17,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும், மருத்துவ மேற்படிப்புக்கான கட்டணம் ரூ.50,000-யிலிருந்து ரூ.3,00,000-மாக உயர்த்தப்படும்" என்றும் அறிவித்துள்ளார் கர்நாடகா நீர்வளம் மற்றும் மருத்துப்படிப்புக்கான அமைச்சர் டி.கே சிவக்குமார். 

மேலும், ``கடந்த பத்து ஆண்டுகளாகக் கட்டணத்தை உயர்த்தப்படவில்லை. முதல்முறையாகக் கட்டணத்தை உயர்த்துகிறோம். கட்டணத்தை உயர்த்துவதன்மூலம், அரசுக்கு கூடுதலாகக் கிடைக்கும் தொகையை அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டமைப்பை மேம்படுத்தவும், போதுமான நிதி இல்லாததால் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. கட்டணத்தை உயர்த்துவதன்மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாளர்களுக்குத் தேசிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் டி.கே. சிவக்குமார். 

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான படிப்புக் கட்டணம் ரூ.13,600 என்பது குறிப்பிடத்தக்கது.