வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (20/12/2018)

கடைசி தொடர்பு:12:49 (20/12/2018)

ஆன்லைன் விற்பனை... தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக விற்பனையாளர்கள் போர்க்கொடி!

மொபைல்போன் விற்பனையகங்கள்தாம் ஆன்லைன் வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மொபைல்போன் விற்பனையில் 38 சதவிகிதமும், தொலைக்காட்சிகள் விற்பனையில் 20 சதவிகிதமும் ஆன்லைன் மூலம் நடைபெறுகின்றன.

ஆன்லைன் விற்பனை... தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக விற்பனையாளர்கள் போர்க்கொடி!

ஆன்லைன் வர்த்தகம் இந்தியாவில் நுழைந்ததிலிருந்து உள்ளூர் சில்லறை விற்பனை நிறுவனங்கள், குறிப்பாக மொபைல்போன், வீட்டு உபயோகப்பொருள் விற்பனையகங்கள் கடுமையான சவாலைச் சந்திக்கின்றன. இதைச் சமாளிப்பதற்காகப் பல்வேறு உத்திகளை வகுத்து வாடிக்கையாளர்களைக் கவரும் வேலையில் விற்பனை நிறுவனங்கள் இறங்கியுள்ளன. எனினும், நாளுக்குநாள் ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சியடைந்து வருகிறது.

ஆன்லைன் விற்பனை

ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் நிறுவனங்கள் இந்தியச் சந்தையின்மீது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் உடன் இணைந்து, பெரிய அளவில் முதலீடு செய்து, விற்பனைத்தளத்தை இங்கு விரிவுபடுத்தி வருகிறது. இந்த இரண்டு ஆன்லைன் நிறுவனங்களும் போட்டிபோட்டு சலுகைகளை அறிவிக்கின்றன. `ஒருநாள் அதிரடி விலைக்குறைப்பு விற்பனை', `பண்டிகைக்கால விலைக்குறைப்பு விற்பனை' போன்ற பல்வேறு உத்திகளுடனும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. இவற்றுடன் ஒப்பிடும்போது கடை வாடகை கொடுத்து விற்பனையகங்களை நடத்திவரும் நிறுவனங்களால் பெரிய அளவில் விலைக்குறைப்பு போன்ற சலுகைகளை வழங்க முடிவதில்லை. ஸ்மார்ட்போன்கள் பெருகிவிட்ட சூழலில், கடைக்குச்சென்று பொருள் வாங்குவதைவிட, ஆன்லைனில் பர்ச்சேஸ் செய்வதை பெருமையாகக் கருதும் மனப்போக்கும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

மொபைல்போன் விற்பனையகங்கள்தாம் ஆன்லைன் வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மொபைல்போன் விற்பனையில் 38 சதவிகிதமும், தொலைக்காட்சிகள் விற்பனையில் 20 சதவிகிதமும் ஆன்லைன் மூலம் நடைபெறுகின்றன. வீட்டுப் பயன்பாட்டுப்பொருள்களின் விற்பனை 7% ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. நடப்பு பண்டிகைக்கால விற்பனையில் செல்பேசிகளின் ஆன்லைன் விற்பனை, முதன்முறையாக 50 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஆன்லைன் விற்பனை நிறுவனங்களை எதிர்த்துவந்த சில்லறை விற்பனையகங்கள், தற்போது, தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன. `ஆன்லைன் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை விலையில் கொடுப்பதால்,  அவர்களால் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து, வாடிக்கையாளர்களைக் கவர முடிகிறது’ என மொபைல்போன் மற்றும் வீட்டு உபயோகப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு மட்டும் அதிகப்படியான சப்ளை செய்வதாகவும், தங்களுக்கு சப்ளை செய்ய மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. சில மொபைல்போன் நிறுவனங்கள், ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்வதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்களின் குற்றச்சாட்டுகளை தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்துள்ளன. தாங்கள் எந்தவித கூடுதல் சலுகையும் தருவதில்லை என்றும், ஆன்லைன் நிறுவனங்களே சலுகை விலை விற்பனையைத் தீர்மானித்துக்கொள்கின்றன என்றும் விளக்கமளித்துள்ளன. இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்று விற்பனை நிறுவனங்களின் சார்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

சுரேஷ் பிரபு

இந்நிலையில், `ஆன்லைன் விற்பனை குறித்து தேசிய அளவிலான கொள்கையை வகுப்பதற்காக, கடந்த ஏப்ரல், ஜூலை மாதங்களில், தொடர்புடைய அமைச்சகங்கள், ரிசர்வ் வங்கி, தொழில் நிறுவனங்கள், ஆன்லைன் நிறுவனங்கள், ஐ.டி. மற்றும் பேமன்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது’ என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் தெரிவித்தார். இதுதொடர்பாக விரைவில் ஒரு பாலிசி உருவாக்கப்படும் என்றும், ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் அதிகப்படியான தள்ளுபடிகளை ஒழுங்குபடுத்துவதற்கான செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

`தற்போது ஆன்லைன் விற்பனை, தகவல் தொழில்நுட்பச் சட்டம், நிறுவனச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றால் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு முதலீடுகளை அந்நியச் செலாவாணி மேலாண்மைச் சட்டம் கண்காணிக்கிறது என்பதால் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை’ என்றார். இந்த அறிவிப்பு, விற்பனை நிறுவனங்களுக்கு சற்று நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்