வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (20/12/2018)

கடைசி தொடர்பு:12:50 (20/12/2018)

`இப்போது எந்த அவசியமும் இல்லை!’- மு.க.ஸ்டாலின் கருத்தை நிராகரித்த மம்தா பானர்ஜி

அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் பிரதமர் வேட்பாளர் தொடர்பாகப் பேசி முடிவெடுக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

கருணாநிதி சிலை திறப்பு விழா சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதாகத் தெரிவித்தார். மேலும், ``நாட்டின் பிரதமர் வேட்பாளராகத் தமிழகத்திலிருந்து ராகுல் காந்தியின் பெயரை நான் முன்மொழிகிறேன். பாசிச மோடி ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ராகுல் காந்திக்கு இருக்கிறது. அவரின் கரத்தை அனைவரும் ஒன்றுசேர்ந்து வலுப்படுத்துவோம். நாட்டைக் காப்பாற்றுவோம் என்று உங்களோடு சேர்ந்து நானும் உறுதிமொழி எடுக்கிறேன்’’ என்று பேசினார். இவரின் பேச்சு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல்- மு.க.ஸ்டாலின்

ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டம் தெரிவித்ததாக முன்னதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அவரே இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். ``அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் பிரதமர் வேட்பாளர் தொடர்பாகப் பேசி முடிவெடுக்க வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்தி அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்தால் நாங்களும் அதை ஏற்றுக்கொள்கிறோம். 

ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை. அதற்கு, இது சரியான நேரமும் இல்லை. தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாக இணைந்துள்ளோம். அப்படி இருக்க, தனியாக யாரும் எந்த முடிவையும் எடுக்க முடியாது” எனப் பேசியுள்ளார்.