`பாதுகாப்பாக போங்கப்பா!' - அப்பா, அம்மாவை வழியனுப்பிய சில நொடியில் பறிபோன மகனின் உயிர் | IT guy died in train accident

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (20/12/2018)

கடைசி தொடர்பு:16:31 (20/12/2018)

`பாதுகாப்பாக போங்கப்பா!' - அப்பா, அம்மாவை வழியனுப்பிய சில நொடியில் பறிபோன மகனின் உயிர்

ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பெற்றொர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ரயிலில் விபத்தில் பலியான விகரம்

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த விக்ரம் விஜயன், பெங்களூருவில் தங்கி தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர், விஜயன் சக்கிங்கால் - உதயகுமாரி ஆகியோர் சொந்த ஊரான பாலக்காட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்குமுன் தன் மகனைக் காண பெங்களூரு வந்தனர் பெற்றோர். சில நாள்கள் மகனுடன் தங்கியிருந்த நிலையில், இருவரும் யஷ்வந்த்பூர் -கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். 

பெற்றோரை வழியனுப்ப விக்ரம் விஜயனும் கார்மெலார்ம் ரயில் நிலையத்துக்கு வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு 8.56 -க்கு ரயில் ப்ளாட்ஃபார்முக்கு வந்தது. அந்த எஸ்பிரஸ் ரயில் அந்த ரயில் நிலையத்தில் வெறும் 2 நிமிடங்கள்தான் நிற்கும். விக்ரமும் பெற்றோருடன் ஏ.சி கோச்சில் ஏறி, அவர்களின் இருக்கையில் லக்கேஜ்களை வைத்துவிட்டு, திரும்பும்போது ரயில் புறப்பட்டிருந்தது.

பெற்றோர்

பெற்றோரைப் பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு ஓடும் ரயில் இருந்து அவசரமாக இறங்கியுள்ளார் விக்ரம் விஜயன். அவர் ரயில் செல்லும் திசையின் எதிர்த்திசையில் இறங்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தவர் ப்ளாட்ஃபாரத்துக்கும் ரயிலுக்கும் இருந்த சிறிய இடைவெளியில் சிக்கி பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
தன் மகன் கீழே விழுந்ததைப் பார்த்துப் பதறிய தந்தையும்  ஓடும் ரயில் இருந்து குதித்தார். கீழே விழுந்த அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை ரயிலில் இருந்து பார்த்தவர்கள் உடனடியாக அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். விஜயன் சங்கிங்கால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பெற்றோரின் கண்முன்னே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 
இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பேசிய போலீஸார்,  ``விக்ரம் எதிர்த்திசையில் இறங்கியதுதான் விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்திருக்கிறது” என்றார். இந்த ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.