`ஆபத்து தெரியும்; வறுமைதான் காரணம்!' - சுரங்கத்துக்குள் உயிருக்குப் போராடும் 13 பேருக்காக கண்கலங்கும் சக ஊழியர் | All miners knew the mine was unsafe says Meghalaya labour

வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (20/12/2018)

கடைசி தொடர்பு:15:16 (20/12/2018)

`ஆபத்து தெரியும்; வறுமைதான் காரணம்!' - சுரங்கத்துக்குள் உயிருக்குப் போராடும் 13 பேருக்காக கண்கலங்கும் சக ஊழியர்

மேகாலயாவில் ஜைன்டியா மாவட்டத்தின் சான் என்ற கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று சுரங்கத்துக்கு அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் உள்ள தண்ணீர் சுரங்கத்துக்குள் புகுந்துள்ளது. 370 அடி ஆழம் உள்ள அந்தச் சுரங்கத்தில் 70 அடி வரையிலும் தண்ணீர் உள்ளது. சுரங்கத்துக்குள் தண்ணீர் புகுந்த உடனேயே அங்கிருந்த ஐந்து தொழிலாளர்கள் வெளியில் சென்றுவிட்டனர். ஆனால், 13 பேர் உள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர்.

மேகாலயா சுரங்கம்

தொழிலாளர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததும் கடந்த ஒரு வாரமாக  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 100 பேர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். ஒரு புறம் சுரங்கத்தில் உள்ள நீரை வெளியேற்றும் பணிகளும் மறுபுறம் சுரங்கத்தினுள் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒரு வாரமாக தேடுதல் பணி நடைபெற்றும் இதுவரை தொழிலாளர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர். 

மேகாலயா சுரங்கம்

இந்த நிலையில், சுரங்கத்தின் உள்ளே சிக்கித் தப்பிய சயிப் அலி என்ற தொழிலாளி என்.டி.டி.வி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ``கடந்த 13-ம் தேதி நாங்கள் சுரங்கத்தினுள் செல்லும்போதே கவனித்தோம், நிலக்கரிகள் மிருதுவாக இருந்தன. எங்கிருந்தோ சுரங்கத்தினுள் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது என எங்களுக்கு அப்போதே தெரிந்துவிட்டது. சுரங்கத்தின் எந்தப் பகுதியில் அதிக தண்ணீர் வரும்; நாங்கள் எங்கு செல்ல வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களும் எங்கள் மேனேஜர் சர்தாருக்குத் தெரியும். அவர் ஒரு கட்டத்துக்கு மேல் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் வரும் என அன்று சுரங்கத்துக்குள் சென்ற அனைவருக்கும் தெரியும். இருந்தும் வறுமை நிலை காரணமாகவே நாங்கள் உள்ளே சென்றோம்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

சயிப் அலி

``என் கணவரை இறுதியாக ஒருமுறை நான் பார்க்க வேண்டும். ஒரு வேளை அவர் இறந்திருந்தால் அவரது உடலையாவது பார்க்க வேண்டும். நாங்கள் மிகவும் வறுமையானவர்கள். எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன” என சுரங்கத்தில் சிக்கியிருக்கும் ஒரு தொழிலாளியின் மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

அந்தக் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவராவது நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வருகின்றனர். அங்குள்ள சுரங்கங்கள் அனைத்தும் மிகவும் குறுகலாகவும் ஆழமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே 2000 ரூபாய் சம்பளத்துக்கு அவர்கள் சுரங்கத்துக்கு வேலைக்குச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.

News Credits : NDTV